சிறையில் இருந்து மீண்டாலும் அரசியலில் ஈடுபட முடியாது: ரஞ்சன் தொடர்பில் வெளியான தகவல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய மன்னிப்பின் பிரகாரம் அவருக்கு அரசியல் உரிமைகள் கிடையாது என நீதி அமைச்சின் அதிகாரி ராகித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியலில் ஈடுபட முடியாது
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 34 (1) ஆவது சரத்தின் கீழ் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு.
ஆனால் அரசியல் உரிமைகளுடன் கூடிய ஜனாதிபதியின் முழுமையான மன்னிப்பை பெற அரசியலமைப்பின் 34 (2) ஆவது பிரிவின் கீழ் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.
இலங்கையின் சட்டத்தின்படி, இரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நபர், ஜனாதிபதியின் முழுமையான மன்னிப்பு வழங்கப்படாவிட்டால், 7 ஆண்டுகளுக்கு அரசியல் மற்றும் குடியுரிமை உரிமைகளை இழக்க நேரிடும்” என கூறியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று(26) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்கப்பட்டு ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவின் கோரிக்கை
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அரசியல் உரிமைகளுடன் கூடிய முழுமையான ஜனாதிபதி மன்னிப்பை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு முழுமையான ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்காமையினால் ஏமாற்றமடைந்துள்ளோம் என தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Glad to see @RamanayakeR free!
— Sajith Premadasa (@sajithpremadasa) August 26, 2022
Disappointed to learn that he was released under 34 (1) (d) of the constitution which is merely a remission of his sentence rather than a full pardon with his civic and political rights intact under 34 (2). pic.twitter.com/t4xqu6tnhM
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால், எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோருக்கு பூரண ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், சிறையில் இருந்து வெளியில் வந்து அவர்கள் அரசியலில் ஈடுப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.