“அரசியல் கைதியாக தன்னை கருதும் ரஞ்சன் ராமநாயக்க”
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனைப்பெற்றுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஏனைய அமைப்புகளிடம் முறையிடுவது குறித்து ஆராயப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி (Hector Appuhamy) இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அங்குனகொலபெலெஸ்ஸா சிறைச்சாலையில், அன்மையில் ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்தபோது, ஐக்கிய நாடுகள் ஜெனீவா பேரவையில் தனது பிரச்சினையை முறையிடுமாறு, ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake) கேட்டுக்கொண்டதாக அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
தமக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பை மறுத்து, தொடர்ந்தும் பழிதீர்க்கப்படுவதால், தன்னை ஒரு அரசியல் கைதியாக ரஞ்சன் கருதுகின்றார். கொலை குற்றவாளிகள் உட்பட பலர் மன்னிக்கப்பட்டனர், ஆனால் ரஞ்சன் ராமநாயக்க ஒரு எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதியாக இருப்பதன் காரணமாகவே அவருக்கு மன்னிப்பு மறுக்கப்பட்டது, அவர் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்திருந்தால், தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டிருப்பார் என்று அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவரது அரசியல் சகாக்கள் அவரைச் சென்று சந்திப்பதற்காக, ராமநாயக்கவை கொழும்பில் உள்ள சிறைக்கு மாற்றுமாறும் தமது கட்சி கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.