ரஞ்சன் ராமநாயக்க கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதி!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி - கராபிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சனுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்திருந்தது.
மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்தா சில்வா நேற்று முன்தினம் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இருப்பினும், நீதி அமைச்சக வட்டாரங்களின்படி, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது இன்னும் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக அரசாங்கத்திற்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே பல பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும், கோரிக்கையின் பேரில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.