ரணிலின் வழக்கில் இரண்டாக பிரிந்துள்ள சட்டமா அதிபர் திணைக்களம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏதிரான வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் இரு கூறுகளாக பிரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட பிரித்தானிய விஜயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு வூல்ஹெம்ப்டன் பல்கலைக்கழகம் (University of Wolverhampton) வழங்கிய பதில்கள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்குள் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
ரணில் விக்ரமசிங்க 16.6 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் நிறைவடைவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு இந்த முரண்பாடே காரணமாக அமைந்துள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பல்கலைக்கழகம் அனுப்பிய மின்னஞ்சல் பதிலில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பட்டமளிப்பு விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
திணைக்களத்திற்குள் நிலவும் முரண்பாடு
ஒரு தரப்பு பல்கலைக்கழகத்தின் பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) நிலைப்பாட்டை ஆதரிக்கிறது.
மறு தரப்பு அந்தப் பதிலைத் தகுந்த ஆதாரமாக ஏற்றுக்கொள்ளலாம் என்ற கருத்தைக் கொண்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் பல்கலைக்கழகத்தின் இந்தப் பதில்களை வழக்கின் விசாரணையை முன்னெடுக்கும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸிடம் சமர்ப்பித்துள்ளது.
பல்கலைக்கழகம் வழங்கிய பதில்களை சட்டமா அதிபர் திணைக்களம் மேலும் ஆய்வு செய்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் எனத் தெரியவருகிறது.
இந்த இழுபறி நிலை காரணமாக விசாரணைகளை நிறைவு செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையெழுத்து மாதிரிகள் தொடர்பான அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை இன்னும் சட்டமா அதிபருக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.
இந்த அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதை விரைவுபடுத்துமாறும்இ பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளுமாறும் சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் CID)-யினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.