சுயசரிதை எழுதும் ரணில் விக்ரமசிங்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), தனது அரசியல் வாழ்க்கை தொடர்பான சுயசரிதையொன்றை எழுதும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
1973ம் ஆண்டு கம்பஹா மாவட்டத்தின் பியகம தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக ரணில் விக்ரமசிங்க, தனது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்தார்.
மூத்த அரசியல்வாதி
அதன் பின்னர் 1977ம் ஆண்டு தொடக்கம் 2022ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்தார். தற்போதைய இலங்கை அரசியல்வாதிகளில் 1970ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு அடுத்த மூத்த அரசியல்வாதியாக ரணில் விக்ரமசிங்க காணப்படுகின்றார்.
கடந்த 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவி தவிர்ந்த நாடாளுமன்றத்தின் ஏனைய அனைத்தப் பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.
அத்துடன் இலங்கை பொருளாதார ரீதியாக வீழ்ச்சியுற்று, வங்குரோத்து அடைந்திருந்த நிலையில் இந்நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்று, மிகக் குறுகிய காலத்திற்குள்ளாக இலங்கையை பொருளாதார சரிவில் இருந்து மீட்டெடுத்த திறமையான அரசியல் தலைவராகவும் ரணில் விக்ரமசிங்க பாராட்டப்படுகின்றார்.
ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தற்போதைக்கு சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார சொற்பொழிவாளராக அவர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
இந்நிலையில் தனது கடந்த 50 வருடகால அரசியல் வாழ்க்கை குறித்த சுயசரிதையொன்றை எழுதும் முயற்சியில்அவர் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.