ரணில் விக்ரமசிங்க மாயாஜால வித்தையை காட்ட முடியாது-ராஜித சேனாரத்ன
தேர்தல் அரசியல்வாதிகளுக்கு முக்கியமாக இருந்தாலும் மக்களுக்கு பட்டினி தொடர்பாக பிரச்சினை இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
களுத்துயைில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மக்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர்.
மக்களுக்கு பட்டினி தொடர்பான பிரச்சினை
தேர்தலை கோரும் அரசியல்வாதிகளுக்கு தேர்தல் முக்கியம். தேர்தலில் பங்குபற்றாத பெரும்பான்மை மக்கள் இலங்கையில் இருக்கின்றனர். அவர்களுக்கு பட்டினி தொடர்பான பிரச்சினையே உள்ளது.
பிள்ளைக்கு பால் மாவை கொள்வனவு செய்யும் பிரச்சினை, மருந்து பிரச்சினை, நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் இல்லை. மக்களுக்கு தேர்தல் வேண்டுமா அல்லது உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியவசிய பொருட்கள் வேண்டுமா என்ற பிரச்சினை இருக்கின்றது.
இவ்வாறான மிக மோசமான சூழ்நிலையிலேயே நாம் தேர்தல் ஒன்றை எதிர்கொள்கிறோம். ரணில் விக்ரமசிங்கவுக்கு மாயாஜால வித்தையை காட்ட முடியாது.
எவர் ஆட்சிக்கு வந்தாலும் மாயாஜால வித்தையை காட்ட முடியாது. நாடு மிகவும் அதளபாதாளத்திற்கு சென்றுள்ளார். கிணற்றில் நீர் அடிமட்டத்திற்கு வற்றியது போன்ற நிலைமை.
வெளிநாடுகளிடம் இருந்து ஒரு டொலர் கூட கிடைக்கவில்லை
இலங்கையிடம் ரூபாவும் இல்லை.டொலரும் இல்லை. இதுவரை வெளிநாடுகளில் இருந்து ஒரு டொலர் கூட கிடைக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் சான்றிதழ் கிடைக்கும் வரை டொலர் கிடைக்காது.
இதனால், இருப்பில் இருக்கும் பணத்தை பயன்படுத்தியே அரசாங்கத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஓய்வூதியத்தை செலுத்த பணமில்லை. ஓய்வூதியத்தை செலுத்த இன்னும் காலம் செல்லும். சில நேரம் அரச ஊழியர்களுக்கு பணம் கிடைக்காமல் போகலாம்.
சர்வதேச நாணய நிதியத்தின் சான்றிதழ் கிடைப்பது தாமதமானால் இதனை எதிர்கொள்ள நேரிடும். புதிதாக படைப்பதற்பு பணம் இல்லை. இருக்கும் பணத்தை பயன்படுத்தியே இவற்றை செய்ய வேண்டும்.
அரசாங்கம் சமாளித்து வருகிறது. ஒரு இடத்தில் எடுத்து, இன்னுமொரு இடத்திற்கு கொடுத்து, நாட்டில் கிடைக்கும் வருமானத்தை வைத்து அரசாங்கம் சமாளித்து வருகிறது.
வரிகளை அறவிட்டு, அந்த பணத்தையே அரசாங்கம் நிர்வாகத்தை முன்னெடுத்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் சான்றிதழ் கிடைத்த பின்னர், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, கொரியாவின் கொய்கா, ஜப்பானின் ஜய்கா போன்ற நிறுவனங்கள் நிதியுதவிகளை வழங்க தயாராக உள்ளன.அது வரை மிகவும் நெருக்கடியான நிலைமையே காணப்படும் எனவும் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.