நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் நானே ஜனாதிபதி
நண்பர்கள் மற்றும் எதிரிகளுக்கும் தாமே ஜனாதிபதி என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டத்தில் இன்று(21)பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார பாதுகாப்பு
ஐக்கிய தேசியக்கட்சியைப் போன்றே தாம் இந்த நாட்டினதும் தலைவர் எனவும் இந்த இரண்டையும் பிரித்து கையாள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தம்மை வெளியேற்றும் நோக்கில் தமது வீட்டுக்கு தீ மூட்டிய போதிலும் தாம் அவ்வாறு விலகவில்லை எனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் அவ்வாறு விலகிச் செல்ல மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ராஜபக்சக்களை பாதுகாக்க பதவி ஏற்றுக்கொண்டதாக விமர்சனம் செய்த போதிலும் தாம் நாட்டு மக்களையும் பொருளாதாரத்தையும் பாதுகாத்துக் கொள்ள பதவியை ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
போராட்டம் நடைபெற்ற காலத்தில் அரசாங்கத்தின் கையிருப்பில் இருந்த டொலர்களை விடவும் தம்மிடம் கூடுதலான தொகையாக 200 டொலர்கள் இருந்தது எனவும், மாற்றத்தை மற்றவர்களிடமிருந்து ஆரம்பிக்காது தம்மிடமிருந்து ஆரம்பித்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் வகையிலே 21ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.