ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில்: உத்தியோகபூர்வமாக அறிவிப்பு விரைவில்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க(Ranil Wickremesinghe) எந்த கட்சியில் போட்டியிடுவார் என்பதை ஜூன் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (21.05.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும், அதற்காக ஐக்கிய தேசியக் கட்சி அல்லது வேறு எந்தக் கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேசிய வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க தன்னை முன்னிறுத்துவார் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், சஜித் பிரேமதாச தனது கட்சி உறுப்பினர்களை தக்கவைத்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி விக்ரமசிங்க போட்டியிட மாட்டார் என்று ஐக்கிய மக்கள் சக்தியினர் உட்பட பலரால் ஒரு கதை பரப்பப்படுகிறது.
எவ்வாறாயினும், விக்ரமசிங்க, அத்தகைய கூற்றை முன்வைக்கும் அனைவருக்கும் ஒரு அடியை வழங்குவார்,
ஏனெனில் அவர் மற்றொரு பதவிக்காலத்தை கோருவார்.
உத்தியோகபூர்வ வேட்புமனு
அதற்காக அடுத்த மாதம் அவர் தனது வேட்புமனுவை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார். நாட்டின் நலனுக்காக கடினமான நேரத்தில் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டதன் மூலம் விக்ரமசிங்க தனது திறமையை நிரூபித்துள்ளார்.
பலர் அதைத் தவிர்த்தபோது அவர் அதனை ஏற்றுக்கொண்டார். இந்தநிலையில் ரணில் தனியொரு கட்சியில் போட்டியிட மாட்டார். ஜனாதிபதி தேர்தலில் பல சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்துவார்.
மே தினத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏன் ஐக்கிய தேசியக் கட்சியின் மேடையில் ஏறவில்லை என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
இருப்பினும், அத்தகைய நிகழ்வுக்கு அவசரம் இல்லை. சரியான நேரத்தில் சேர பலர் காத்திருக்கிறார்கள். ஐக்கிய மக்கள் சக்தியை வியத்மக குழுவினர் கைப்பற்றி வருவதால் பலர் விரக்தியடைந்துள்ளனர். அவர்கள் குழுவாகவோ அல்லது தனித்தனியாகவோஐக்கிய தேசியக்கட்சியில் இணைவார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதற்கு அழைப்பு விடுக்கும் வேறு சிலரும் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளனர். அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அவர்களும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரை கைவிட்டு ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைவார்கள்." என மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - சிவா மயூரி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |