இப்படி ஒரு துயரத்தை நான் பார்த்ததில்லை! தனது வீடு மற்றும் புத்தகங்கள் எரியூட்டப்பட்டமை குறித்து வருந்தும் ரணில்(Video)
நாடு மிகப்பெரிய பொருளாதார பேரழிவை சந்தித்துக்கொண்டிருந்போதே நான் நாட்டைக் கைப்பற்றினேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காணொளி மூலமாக விசேட அறிவித்தலை ஒன்றை வெளியிடும்போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இப்படி ஒரு துன்பத்தை நான் பார்த்ததில்லை
[
நாட்டில் நிலவும் பலவீனமான நிர்வாக முறைமையினால், இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடியை ஒரு சில நாட்களில் மீளப்பெற முடியாது எனவும், அதனை மீட்பதற்கு குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் எனவும் தெரிவித்தார்.
குறைந்தபட்சம் 04 வருடங்கள் நீண்டகால தீர்வுகளுடன் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பதை சர்வதேச நாணய நிதியம் கூட ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எரிவாயு மற்றும் எண்ணெய் வரிசையில் மக்கள் அவதிப்படும் துயரத்தை இதற்கு முன்னர் தாம் பார்க்கவில்லை என்றும், அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.
என்னுடைய ஒரே வீடு அது மாத்திரமே
ஜூலை 9ஆம் திகதி நடைபெற்ற அனைத்துக் கூட்டங்களையும் ஒத்திவைத்துவிட்டு வீட்டிலேயே தங்கியிருந்ததாகவும், போராட்டம் முடிந்து போராட்டக்காரர்கள் வீட்டைக் கடந்து செல்லும்போது பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொலிஸார் தன்னை வீட்டை விட்டு வெளியேறச் சொன்னதாகவும் கூறினார்.
இதன் காரணமாக மாலையில் தானும் மனைவியும் வீட்டை விட்டு வெளியேறியதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அதன்போது, தனது வீடு தீக்கிரையாக்கப்பட்டமை தமக்கு தெரியவந்ததாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையிலும் வெளிநாட்டிலும் தமக்கு இருந்த ஒரே வீடு இந்த வீடு என்றும், தற்போது அது எரிந்து நாசமாகிவிட்டதாகவும், அதில் சேகரிக்கப்பட்ட அனைத்து பெறுமதிமிக்க புத்தகங்களையும் நன்கொடையாக வழங்குவதற்கு தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க உடன்பட்டிருந்ததாகவும் பிரதமர் தெரிவித்தார்.
தன்னிடம் 2500 பழமையான படைப்புகள் இருந்ததாகவும், தற்போது பழைய அரசு படம் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.