மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் குறித்து ரணில் புகழாரம்
மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. அது தொடர்ந்து பணியாற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 17ஆவது ஆண்டு நிறைவு தொடர்பில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
''மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் பதினேழாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அன்பான வாழ்த்துக்களை தெரிவிப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது.
அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி நிற்பது சிறப்புமிக்கது
ஆரம்ப காலம் முதல் மலையக மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் மன்றத்தின் தளராத அர்ப்பணிப்பு குறிப்பிடத்தக்க சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலவசக் கருத்தரங்குகளை நடத்துதல், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளின் கல்வித்துறைசார் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்தி செய்தல் என்பன பாராட்டுக்குரியவை.
மேலும், பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த புலமைப்பரிசில் வழங்கல், தொண்டர் ஆசிரியர்களுக்கான ஊக்கத்தொகை, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கான மாதிரிப் பரீட்சைகளை நடத்துதல், இளம் திறமையாளர்களை வளர்த்தல், கல்வியை ஊக்குவித்தல் ஆகியவற்றில் மன்றம் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி நிற்பது சிறப்புமிக்கது.
தேசத்தின் முன்னேற்றத்துக்கு பங்களிக்கும் பொறுப்புள்ள குடிமக்களை வளர்ப்பதற்கும் இனம், மதம், மொழி பாராது சேவை செய்வதன் மூலம் உள்ளடங்கும் அர்ப்பணிப்பு, தடைகளைத் தாண்டிச் செல்வதற்கும் உந்துசக்தியாகிறது.
எதிர்கால முயற்சிகள் வெற்றியளிக்கும்
குறிப்பாக, மன்றத்தின் முன்முயற்சியை பற்றி அறிந்துகொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.இது ஒற்றுமையை எடுத்துக்காட்டி நிற்கிறது, தேசத்தின் பன்முகத்தன்மை வாய்ந்த சமுதாயத்தின் வலிமைக்கு வழிவகுக்கிறது.
இந்த முயற்சிகள் கல்விப்பரப்பை வடிவமைத்தது மட்டுமன்றி மலையக மாணவர்களின் திறன்கள் மற்றும் திறமைகளை இனங்கண்டு அவர்களை வளர்ப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றன.
மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் எண்ணற்ற மாணவர்களை ஊக்குவித்து, அவர்களது கல்விசார் நடவடிக்கைகளை விருத்தி செய்து வருவதால், மன்றம் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது.
அது தொடர்ந்து பணியாற்றும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நிறுவனத்தின் எதிர்கால முயற்சிகள் மேலும் வெற்றிகளால் நிரப்பப்படட்டும். மேலும் கல்விக்கான மன்றத்தின் அர்ப்பணிப்பு உறுதியாக இருக்கட்டும்." என குறிப்பிட்டுள்ளார்.



