ரணில் ஜனாதிபதி - சஜித் பிரதமர்! பரிந்துரைக்கப்பட்டுள்ள பெயர்கள்
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியுள்ள நிலையில், நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பதில் ஜனாதிபதியாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள உள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ரணில் பதில் ஜனாதிபதியாக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் தோல்வியடைந்து ஜனாதிபதியாகும் ரணில்
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அத்துடன் அந்த கட்சியும் படுதோல்வியடைந்ததுடன் தேசிய பட்டியலில் மாத்திரம் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தது. அந்த தேசிய பட்டியல் உறுப்பினராக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார நெருக்கடி காரணமாக ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக நாட்டில் கிளர்ச்சி ஏற்பட்டது. இதனால், ராஜபக்ச குடும்பத்தினர் அமைச்சரவையில் இருந்து விலகியதுடன் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
இப்படியான நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தார்.
எனினும் நாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டங்கள் வலுவடைந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்து விட்டு, இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் மாலைதீவு சென்று அங்கிருந்து சிங்கப்பூர் சென்றடைந்தார்.
அத்துடன் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவ்வாறான நிலைமையில் ரணில் விக்ரமசிங்க, பதில் ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக பதவியேற்க உள்ளார்.
பிரதமர் பதவிக்கு சஜித் பிரேமதாச
இதனிடையே சபாநாயகர் தலைமையில் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறும் கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் புதிய பிரதமர் ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளார்.
சர்வக்கட்சி அரசாங்கத்தின் பிரதமர் பதவி தொடர்பில் எதிர்க்கட்சியின் யோசனை சபாநாயகரிடம் கையளிக்கப்பட உள்ளது.
எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயரை பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்க உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் கட்சிகள் நேற்று நடத்திய சிறப்பு பேச்சுவார்த்தையின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சுயாதீனமாக செயற்படும் 10 கட்சிகளின் பிரதிநிதிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பொதுஜன பெரமுனவின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவரான டளஸ் அழகப்பெரும சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் எவரும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளவில்லை.





வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri
