பட்டலந்த குறித்து ரணில் இப்போது பேசுவதில் பலனில்லை! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இப்போது பேசுவதில் எந்தப் பயனும் இல்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விமர்சித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர்,''முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்துப் பேசுவதற்கு இப்போது மிகவும் தாமதமாகிவிட்டார்.
சட்ட நடவடிக்கை
அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும். வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதேபோன்று ஏப்ரல் 10 மற்றும் மே மாதங்களில் ஆணைக்குழு அறிக்கை குறித்து இரண்டு நாள் விவாதத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஒரு குழுவை நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அறிக்கையை நாங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் அனுப்புவோம். விவாதத்தை நடத்துவதற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி குழுவும் வாதிட்டனர்.
பட்டலந்த சம்பவம்
இருப்பினும் விவாதத்திற்கான திகதியை அரசாங்கத்தால் ஒதுக்க முடிந்துள்ளது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் நீதிக்காக நாங்கள் விவாதம் நடத்துவோம். மக்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.
பட்டலந்த சம்பவம் குறித்து முழு விபரமும் அறிந்தவர் முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க, ஆனால் சமீபத்திய நேர்காணலின் போது அல் ஜசீரா அதைப் பற்றிக் கூறும் வரை அவர் அதைப் பற்றி ஒருபோதும் பேசவில்லை. அது இன்று இல்லை.
கடந்த 25 ஆண்டுகளில் ரணில் இதைப் பற்றிப் பேசியிருக்கலாம். அல் ஜசீரா அதைப் பற்றிப் பேசும் வரை அவர் எதுவும் சொல்லவில்லை. ரணில் இப்போது மிகவும் தாமதமடைந்து விட்டார்.'' என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.