ராஜபக்சர்களுடன் அரசியல் மோதல் தீவிரம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ராஜபக்ச குடும்பத்திற்கும் இடையில் முறுகல் நிலை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் ஊடாக அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கு மக்களாணை கிடையாது.
அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதாக இருந்தால் ஜனாதிபதி புதிதாக மக்களாணை பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களாணை
கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது நாமல் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அப்போதைய ரணில் அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என நாமல் சாடியுள்ளார்.
சர்வதேச பிணைமுறிகளில் இருந்து 12 பில்லியன் டொலர் கடன்களை பெற்றது. இந்த நிதிக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியவில்லை. அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிதியும் மாயமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதி தேர்தல் குறித்து கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. கட்சி ரீதியில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு எதிராக செய்படுபவர்கள் கட்சியில் இருந்து தாராளமாக வெளியேறலாம் என நாமல் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சர்களின் சொந்தக் கட்சியான பொதுஜன பெரமுன கட்சியிலுள்ள முக்கிய பிரமுகர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பேரம் பேசலுக்கு இணங்கியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் நாமலின் கடுமையான நிலைப்பாடு இன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.