ராஜபக்சக்களுக்குப் பயந்த ரணில்: எழுந்துள்ள விமர்சனம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சக்களுக்குப் பயந்து தன்னுடைய காலத்தைச் செலவழித்தவர் என அகில இலங்கை மகா சபை கட்சியின் தலைவர் காசிலிங்கம் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, வெய் ஓப் மீடியா கற்கை நிலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது எனத் தெளிவாகத்தான் இருந்தோம். ரணில் பல வாக்குறுதிகளை எங்களுக்குக் கொடுத்திருந்தார். முதலில் அவருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது அவர் நீங்கள் கூறுங்கள் எல்லாவற்றையும் செய்கின்றேன் என்றார்.
விசேட அதிகாரம்
அப்போது, மாகாண சபைக்குக் கீழ் இருந்த பல பாடசாலைகளை மத்திய அரசின் கீழ் தேசிய பாடசாலைகளாகவும், வைத்தியசாலைகளையும் தேசிய வைத்தியசாலைகளாகவும் மாற்றியுள்ளனர்.
இதனை உடனடியாக மாகாணத்தின் கீழ் மாற்ற வேண்டும். இதற்குச் சட்டம் இயற்ற வேண்டியதில்லை. இதற்கு ஒரு உத்தரவாதம் வழங்கினால் சரி என்றோம்.
மேலும், கச்சேரிகளை ஒரு அமைச்சரவை தீர்மானம் எடுத்து மாற்ற முடியும் என்றோம். அதற்கும் உடன்படுவதாக அவர் தெரிவித்தார். நாங்கள் விசேட அதிகாரத்தைக் கொண்டு இவற்றையெல்லாம் உருவாக்க முடியும் என்றோம்.
ரணில் ராஜபக்ச
அதேவேளை, இதனைச் செயற்படுத்த 5 பேர் கொண்ட ஒரு குழுவை அமைப்பதாகத் தீர்மானித்தோம். அதற்கும் சரி என்றார் ஜனாதிபதி ரணில். அதனை இந்தியாவுக்கும் அறிவித்தோம். அதன் பின்னர் அவர் இந்தியாவுக்குச் சென்றபோது அவருக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.
அங்கும் இவற்றையெல்லாம் செய்வேன் என்று அவர் கூறினார். ஆனால், திரும்பி இங்கு வந்த பின்னர் இதனைச் செய்யவில்லை. ஏன் என்றால் ராஜபக்ச கட்சி இவற்றைச் செய்வதற்கு இடம் கொடுக்கவில்லை எனத் தெரியவந்தது. ஆதலால் பசில் ராஜபக்சவைச் சந்திப்பதற்கு 5 தடவைகள் முயற்சி செய்தேன். அவர் என்னைச் சந்திப்பதைத் தவிர்த்துக்கொண்டார்.
அப்படியான ரணில் ராஜபக்சக்களுக்குப் பயந்து கொண்டவர் என்பதால் அவரிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது. எனவே, இவரால் எதுவுமே செய்ய முடியாது என முடிவு எடுத்துவிட்டோம். எனவே, தமிழ் மக்கள் சஜித் பிரேமதாசவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
மேலதிக தகவல் - ராகேஷ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |