றம்புக்கண சம்பவம் தொடர்பான அறிக்கையை அழித்து திருத்திய பொலிஸார்: மன்னிப்பு கோரிய பொலிஸ் உயர் அதிகாரி
கேகாலை றம்புக்கண சம்பவம் தொடர்பாக பொலிஸார் தாக்கல் செய்த “பீ” அறிக்கையில் சில இடங்கள் அழிக்கப்பட்டிருந்தமை சம்பந்தமான பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் நேற்றிரவு கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.
றம்புக்கணயில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்த நபர் சம்பந்தமாக பொலிஸாருக்கு எதிராக சட்டத்தரணிகள் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்த போதே குறித்த பொலிஸ் அதிகாரி இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
முறைப்பாட்டாளர்களான சட்டத்தரணிகள், பொலிஸார் தாக்கல் செய்த “பீ.” அறிக்கையில் சில இடங்கள் அழிக்கப்பட்டு திருத்தப்பட்டிருப்பது சம்பந்தமாக நேற்றிரவு கேகாலை நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதன் போது பொலிஸார் “ஏ.ஆர்” அறிக்கை மூலம் நீதிமன்றத்தில் தகவல்களை தாக்கல் செய்திருந்ததுடன் இப்படியான கொலை சம்பந்தமாக “ஏ.ஆர்” அறிக்கை தாக்கல் செய்ய முடியாது என சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
இதனடிப்படையில், “பீ.” அறிக்கை மூலம் விடயங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து விசாரணைகளை ஒத்திவைத்த நீதவான், இறம்புக்கனை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு பட்ட இடங்கள் மற்றும் முச்சக்கர வண்டிக்கு தீயிட்ட இடங்களை பார்வையிட்டுள்ளார்.
இதன் போது சம்பவம் தொடர்பாக மூன்று பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே ஒரு சாட்சியாளர், சாட்சியமளித்த பின்னர், பொலிஸ் அதிகாரி ஒருவர் அச்சுறுத்தியதாக அந்த இடத்திலேயே சட்டத்தரணி ஒருவர் ஊடாக நீதவானிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
அப்போது பொலிஸார், சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் பொலிஸ் அதிகாரியை முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டதுடன் அந்த பொலிஸ் அதிகாரி நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன் பின்னர் நேற்றிரவு மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன் போது சாட்சியாளர்களுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டாம் என நீதவான் நீதிமன்றத்தில் பகிரங்கமாக உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று மீணடும் இன்று மதியம் 12 மணிக்கு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. அதேவேளை இறம்புக்கனை நகரில் நடந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த விதம் தொடர்பான பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
அச்சிடப்படாத சாதாரண தாளில் எழுதி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் மூலம் குற்றவியல் வழக்கு சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் கூறியுள்ளது. “பீ” அறிக்கை மூலம் விடயங்கள் முன்வைக்கப்படவில்லை எனவும் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.



