இறம்பொடை பேருந்து விபத்தில் காப்பாற்றப்பட்ட பச்சிளம் குழந்தை : தத்தெடுக்க முன்வந்த நல் உள்ளங்கள்
இறம்பொடை கோர விபத்தில் தன்னுயிர் போகும் தருவாயிலும் தன் பிள்ளையின் உயிரை ஒரு தாய் காப்பாற்றிய சம்பவம் இலங்கை முழுவதும் பேசுபொருளாகியிருந்தது.
இந்த நிலையில், குறித்த பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதற்கு ஒருவர் முன்வந்துள்ளார்.
குழந்தைக்கு பாதுகாவலர்
அவர் பதிவிட்டுள்ள முகப்புத்தக குறிப்பில்,
“நுவரெலியா மருத்துவமனையில் பணியாற்றும் மகேஷிகா என்ற தாதியொருவர், தாயை இழந்த குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதற்கு முன்வந்துள்ளார்.
"இந்தக் குழந்தைக்கு பாதுகாவலர் யாரும் இல்லையெனில், என் குடும்பத்துடன் சேர்த்து நாங்கள் அவளைக் குழந்தையாகவே தத்தெடுப்போம். இது எனது வாக்குறுதி," என மகேஷிகா என்ற தாதியொருவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார்.
எனது வாழ்நாளில் நான் உயிருடன் இருக்கும் வரை இந்தக் குழந்தை தனிமையில் இருக்க மாட்டாள். என் குடும்பத்தில் ஏற்கனவே இரண்டு மகன்கள் உள்ளனர். அதிகாரிகள் தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மூன்று குழந்தைகளின் சிரிப்பைக் காக்க, நம்மை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். இதுவே உண்மையான சமூகப் பொறுப்பாகும் " என மகேஷிகா சமூக ஊடகத்தில் உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.
மகேஷிகாவின் பதிவிற்கான பின்னூட்டத்திற்கு ஏராளமான அன்பான உள்ளங்கள் பதிலளித்து, அந்தக் குழந்தையை வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நான் அவரை தொடர்புக்கொண்ட போது, நாளை என்னைத் தொடர்பு கொள்வதாக மகேஷிகா வாக்குறுதி அளித்துள்ளார்.
நான் ஒரு திட்டத்துடன் இதைச் செய்ய முன்வந்துள்ளேன். எப்போதும் போலவே, சமூக ஊடகங்களின் பரபரப்பு குறையும் நாளில் அந்தக் குழந்தைகளின் கண்ணீரை தவிர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் இதைச் செய்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் கொத்மலை, ரம்பொட அருகே கெரண்டிஎல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பேரூந்து விபத்தில் உயிர்பிழைத்த பச்சிளம் குழந்தைக்கு சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற பேரூந்து விபத்தின் போது பேரூந்தின் அடியில் சிக்கி, இடையின் கீழ்ப்பகுதி துண்டிக்கப்பட்ட நிலையிலும், ஒரு தாய் தன் ஆறுமாதக் குழந்தையை தன் வயிற்றின் கீழ்ப்பகுதியில் வைத்து பாதுகாத்து பிழைக்க வைத்திருந்தார்.
விபத்தில் குறித்த பச்சிளம் குழந்தையின் தகப்பன், தாய் இருவரும் உயிரிழந்த நிலையில் 06 வயது, 11 வயதான இரண்டு உடன்பிறப்புகளுடன் பச்சிளம் குழந்தையும் கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.