பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி! வாழைச்சேனையில் பேரணி
பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியொன்று இன்றைய தினம் வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பேரணியானது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின், கோறளைப்பற்று வாழைச்சேனை மகளீர் அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.
வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில் நடைபெற்ற
பேரணியானது வாழைச்சேனை பிரதேசசபை முன்பாக ஆரம்பமாகி வாழைச்சேனை பிரதான வீதி
வழியாக வாழைச்சேனை பொலிஸ் நிலையம் வரை பேரணி சென்றுள்ளது.
பேரணியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியினர், முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் வன்கொடுமை மற்றும்
சட்டவிரோத மதுபாவனை போன்றவற்றை ஒழிக்கும் முகமாக விழிப்புணர்வு
கோசங்களுடன் பேரணி நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.













