பிக்குகளை வைத்து ராஜபக்ச அணி நடத்தும் அரசியல் நாடகம்.. எழுந்துள்ள குற்றச்சாட்டு
விகாரமகாதேவி பூங்காவில் மொட்டுக் கட்சியினரும், ராஜபக்ச அணியினரும் நடத்தும் நிகழ்ச்சி வெறுமனே ஓர் அரசியல் திட்டம் மட்டுமே என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்தார்.
குறித்த நிகழ்வுக்கு எந்தவிதமான பௌத்த சாசன அல்லது தர்ம அடிப்படையும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், இது மற்றுமொரு அரசியல் அரங்கேற்றம் மட்டுமே என்றும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியினால் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று(24.10.2026) ஹட்டன் நகரில் நடத்தப்பட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அரசியல் நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அரசியல் நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் அரசியல் ரீதியாகக் கவனம் செலுத்திச் செயற்பட வேண்டும் எனவும், இவ்வாறான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டுசெல்லப் பொறுப்பான தரப்பினர் முன்னெடுக்கும் இவ்வாறான நடவடிக்கைகளைப் பொதுமக்கள் ஏற்கனவே புறக்கணித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பௌத்தம் என்பது அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு, கருணை மற்றும் அகிம்சையைப் போதிக்கும் ஒரு தத்துவம் எனக் குறிப்பிட்டார்.
எனவே, புத்தர் சிலைகளுக்கு முன்னால் சடங்குகளை ஆடுதல், சாபமிடுதல் மற்றும் வெறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகளில் ஈடுபடுதல் ஆகியன பௌத்த போதனைகளுக்கு முற்றிலும் முரணானவை என்றும், அவை பௌத்த கொள்கைகளுக்கு ஏற்புடையவை அல்ல என்றும் சமீர பெரேரா மேலும் தெரிவித்தார்.