முல்லைத்தீவில் தொடரும் மழையுடனான காலநிலை : 22792 குடும்பங்கள் பாதிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 22792 குடும்பங்களை சேர்ந்த 67012 பேர் பாதிப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால் தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இடைத்தங்கல் முகாம்களில்
இதன்காரணமாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2241 குடும்பங்களை சேர்ந்த 7038 நபரும், கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 4658 குடும்பங்களை சேர்ந்த 14650 நபரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 5443குடும்பங்களை சேர்ந்த 17132 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 5476 குடும்பங்களை சேர்ந்த 15392பேரும்,

துணுக்காய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 2418 குடும்பங்களை சேர்ந்த 5868பேரும், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 2556 குடும்பங்களை சேர்ந்த 6932 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்றையதினம் (04) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மக்கள் மீட்கப்பட்டு ஆறு பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள 40 இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதில் உறவினர் வீடுகளில் 3856 குடும்பங்களை சேர்ந்த 11021 நபர்களும், இடைத்தங்கல் முகாம்களில் 1191 குடும்பங்களை சேர்ந்த 3591நபர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டிருக்கும் மின்சார இணைப்புக்கள்
மேலும், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் எ.உமாமகேஸ்வரன் மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் நேற்று (03) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனர்த்த பாதிப்பு நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்டத்தில் இடம்பெறும் அபகரிப்புகள் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.
குறிப்பாக அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் மின்சார இணைப்புக்களைச் சீர்செய்தல், வடிகாலமைப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்புக்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினரால் மாவட்டசெயலாளரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |