நுரைச்சோலை வீடுகள் வழங்கும் திட்டம் தொடர்பில் எழுப்பட்ட கேள்வி
வீடற்ற மக்களுக்கு நுரைச்சோலை வீடுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையில் நிஸாம் காரியப்பர் எம்.பி. பேசியிருப்பது இவர் உண்மையில் ஜனாதிபதி சட்டத்தரணியா என்ற கேள்வியை எழுப்புகிறது என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் ஊடக பேச்சாளர் முபாறக் முப்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக ஊடகவியலாளர் ஒருவருக்கு அனுப்பியுள்ள செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நுரைச்சோலை வீட்டுத்திட்டம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நுரைச்சோலை வீட்டுத்திட்டத்திற்கான விசேட சட்டத்தை நாடாளுமன்றத்தில் அனுமதித்து கைவிடப்பட்டிருக்கும் சவூதி அரசாங்க வீடுகளை வீடற்ற மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்று, இவர் கூறும் விடயங்கள், கடந்த கால அரசாங்களில் மிகப்பெரிய அமைச்சு அதிகாரத்தில் இருந்த இவரது கட்சித்தலைவர், இப்படியொரு சட்டம் கொண்டு வர அழுத்தம் கொடுக்காமல் தூங்கிக்கொண்டிருந்தாரா என கேட்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.

காரியப்பர் கல்முனை மேயர் என்ற அதிகாரத்தில் இருந்த போதாவது இந்த விடயங்களுக்கு ஏன் கல்முனை மாநகர சபையில் பிரேரணை கொண்டு வரவில்லை? இதிலிருந்து, இவர்களின் கட்சிக்கு இறைவன் மிகப்பெரிய அதிகாரங்களை கொடுத்திருந்தும் சமூக பிரச்சினைகளை தீர்க்க முயலாமல் பதவிகளுக்கும் பணத்துக்கும் அடிமைப்பட்டு கிடந்தனர் என்பது வெளிச்சமாகிறது.
சுனாமி வீட்டுத்திட்டம் பற்றிய மேல் நீதிமன்ற கட்டளையை நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து மாற்றலாம் என்ற அறிவு, நீதி அமைச்சராக இருந்த ரவூப் ஹக்கீமுக்கு இதுவரை இருந்ததில்லையா?
இவர்களெல்லாம் நாடாளுமன்றத்தில் இதுவரை காலமும் முட்டாள்களாக இருந்தார்களா? தாம் சட்டத்தரணிகள் என சொல்ல வெட்கமில்லையா?
இவ்வளவு காலமும் சமுகத்தை அப்படியே விட்டு விட்டு, கடந்த ஆட்சிகளில் பதவிக்கும் பணத்துக்கும் அடிமையாகி மௌனமாக இருந்து விட்டு தற்போது ஜனாதிபதி அநுர குமார தலைமையிலான நல்லதொரு செயற்பாட்டு அரசாங்கம் வந்ததால் இது பற்றி நாடாளுமன்றத்தில் பேசி அரசுக்கு தர்ம சங்கடத்தை கொடுத்து தங்களை பெரிதாக காட்டி சமூகத்தை ஏமாற்றுவதே இவர்களின் நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.