இலங்கையர்கள் உள்ளிட்டவர்களுக்கு கத்தார் நாட்டிற்குள் பிரவேசிக்க கட்டுப்பாடுகள் விதிப்பு!
இலங்கையர்கள் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்கள் கட்டார் நாட்டிற்குள் பிரவேசிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் தொடர்பில் கட்டார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, குறித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கோவிட் - 19 தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் கட்டாய தனிமைப்படுத்தலை கட்டார் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் புதிய கோவிட் வைரஸின் பரவல் காரணமாக இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்டாரி பொது சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றின் ஊடாக இதனை கூறியுள்ளது.
இதன்படி, மேற்படி நாடுகளில் இருந்து கட்டார் வரும் அனைவருக்கும் கட்டாய தனிமைப்படுத்தல் அவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
அத்துடன் பயணிகள் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் உள்ளூர் சோதனை மையங்களில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
செல்லுபடியாகும் பி.சி.ஆர் சான்றிதழ் இல்லாமல் யாரும் கட்டாருக்கு விமானத்தில் ஏற முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.