புத்தளத்தில் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகன உதிரிப்பாகங்கள் மீட்பு
புத்தளம் - மணல்குண்று பகுதியில், திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல மோட்டார் சைக்கிள்கள் மற்றும் உதிரிப்பாகங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மணல்குண்று பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் பொருத்தும் நிலையத்தை நேற்று மாலை புத்தளம் பொலிஸார் சுற்றிவளைத்தபோதே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
நவீன மோட்டார் சைக்கிள்
புத்தளம் வேப்பமடு பகுதியில் வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நவீன மோட்டார் சைக்கிள் ஒன்று கடந்த 10 ஆம் திகதி திருடப்பட்டது.
இதனையடுத்து மோட்டார் சைக்கிள் உரிமையாளர் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்போது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV காட்சிகளின் அடிப்படையில், பொதுமக்கள் உதவியுடன், மோட்டார் சைக்கிளை திருடிய சந்தேக நபரை நேற்று மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தொடர் விசாரணை
இதன்போது சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது மோட்டார் சைக்கிளைத் திருடி மணல்குன்று பகுதியில் தளபாட செய்யும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது பொலிஸார் தளபாடம் செய்யும் இடத்தை சுற்றிவளைத்த போது பாரியளவில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் இருப்பதைக் கண்டுப்பிடித்துள்ளனர்.
தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டபோது குறித்த தளபாடம் செய்யும் இடத்தில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் திருத்தும் பணிகள் இடம்பெற்று வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் மோட்டார் சைக்கிள்கள்களின் உதிரிப்பகங்களை கலற்றி விற்பனையில் ஈடுப்பட்டு வந்திருக்கலாமென சந்தேகிப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |