ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளுக்குத் தண்டனையை வழங்கியே தீருவோம்! - கோட்டாபய திட்டவட்டம்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்குவதற்கு தமது அரசு நீதியினுடாக நடவடிக்கை எடுக்கும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
குருநாகலில் இன்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
"உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்குத் தற்போதைய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்ற கூற்றுகளை நாம் நிராகரிக்கின்றோம். முன்னைய அரசின் பலவீனம் காரணமாகவே 2019 உயிர்த்த ஞாயிறு தினமன்று மீண்டும் குண்டுகள் வெடித்தன.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போதைய அரசு தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என ஆணைக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
நல்லாட்சி அரசு 2015 இற்கு முன்னர் நடைமுறையில் இருந்த பாதுகாப்புத் திட்டத்தை பின்பற்ற தவறியமையும், தேசிய பாதுகாப்பில் தளர்வான அணுகுமுறை மற்றும் திறமையின்மையுமே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த முக்கிய காரணிகளாகும்.
நல்லாட்சி அரசில் இருந்தவர்கள் தற்போது அவர்களுக்குப் பொறுப்பு இல்லாதது போன்று கருத்து வெளியிடுகின்றனர். தமது ஆட்சியில் மரணதண்டனையைப் பெற்றுக்கொடுப்பதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள்.
ஒரு அரசால் எவ்வாறு மரணதண்டனை வழங்க முடியும்? அதனைத் தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றமே. 2019 செப்டெம்பரில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு யார் குற்றவாளி என்பதைத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் ஜனவரி மாதமே எமக்கு ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்தது. தாக்குதல்களில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிக்கும் பொறுப்பை தற்போதைய அரச நிர்வாகம் ஏற்கும்" - என்றார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு நீதி வேண்டி இன்று 'கறுப்பு ஞாயிறு' தினத்தை அனுஷ்டிக்கும்படி கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.