யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சமனற்ற நீதி நூல் வெளியீடு : ஒரு முன்மாதிரியான செயற்பாடு
யாழ்ப்பாணத்தில் நடந்து முடிந்திருந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில் யாழ்ப்பாணத்தின் படித்த மனிதர்களின் உயர்ந்த பண்பாட்டினை அவதானிக்க முடிந்தது.
இலங்கையின் பல பாகங்களிலும் நூல் வெளியீடுகள் ஏற்பாடாகி நடந்துவரும் நிகழ்வுகளின் போதும் இது அவற்றிலிருந்து வேறுபட்டிருக்கின்றது.
பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மக்கள் ஒரு சில மணி நேரங்களே அந்த நிகழ்வின்பாலான விதி முறைகளோடு இசைந்து இருப்பார்கள்.
ஆரம்பம் முதல் இறுதிவரை வரவேற்கத்தக்க பண்பாட்டினை அவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.
சமனற்ற நீதி நூல் வெளியீட்டு
ஆங்கில மொழியில் எழுதப்பட்ட மூல நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடாக அது இருந்தது.20.01.2024 அன்று மாலை 2.45 மணிக்கு ஆரம்பமான நூல் வெளியீட்டு நிகழ்வுகள் மாலை ஆறு மணிவரை தொடர்ந்திருந்தன.
அமெரிக்காவில் கலியன் முதலீட்டு நிறுவனத்தின் நிறுவனரான திரு.ராஜ் ராஜரட்ணம் எழுதிய ஆங்கில நூலான uneven என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே "சமனற்ற நீதி" என பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.
அமெரிக்க அரசுடனான தன் அனுபவங்களை தொழில் சுயசரிதை முறையில் விபரித்திருக்கிறார்.யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திரு.சத்தியமூர்த்தி அவர்களின் அயராத முயற்சியில் uneven நூலின் தமிழ் வடிவம் உருவாக்கப்பட்டிருந்தது.
தமிழர்களிடையே உள்ள பங்குச்சந்தை முதலீட்டு அனுபவங்களை மெருகூட்டிக்கொள்ள உலக நாடுகளில் அமெரிக்காவின் போக்கை புரிந்து கொள்ள இந்த நூலின் உள்ளடக்கம் பெரிதும் உதவியாக உள்ளதாக பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பலருடன் மேற்கொண்ட உரையாடல்களின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
வரவேற்பு அணுகுமுறை
தமிழர் பண்பாடாகிய இன்முகத்தோடு வரவேற்றலை சமனற்ற நீதி நூல் வெளியீட்டில் அவதானிக்க முடிந்தது.
வந்தவர்களை வரவேற்று உள்ளழைத்தவர்கள் வந்தவர்களை யாரென அறியும் பொருட்டு பெயர்,இடம், தொடர்பு இலக்கம் என்பவற்றை பதிந்து வைக்கும் படி ஒரு ஏற்பாடு வரவேற்பு வாசலின் இரண்டாம் நிலையில் இருந்தது.
அந்த முறையில் மனம் கவர் அணுகுமுறை இருந்து.அடுத்து குளிர்பானம் வழங்கியிருந்தார்கள்.அதனை வழங்கிய இடத்திலேயே இருந்து அருந்தி விட்டு குளிர்பான பிள்ஸ்டிக் பேணியை குப்பைகள் சேகரிக்கும் தொட்டியில் இட வேண்டும்.சிறப்பாகவே வழிகாட்டி இருந்தார்கள்.
குப்பையிடும் தொட்டிகள் சுத்தமாக பேணப்பட்டிருந்தன.அதன் பின்னரே நூல் வெளியீட்டு மண்டபத்திற்குள் சென்றேன் என எழுத்தாளரும் பங்குச்சந்தை முதலீட்டாளருமான அந்த நிகழ்வில் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்த ஒருவர் தன் கருக்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.
நூல் வெளியிடும் வரையும் அதன் பின்னரும் உரைகள் தொடர்ந்தன.பொருள் சார்ந்த உரைகளாக அவை இருந்திருந்தன.விடயம் சாராத கோணத்தில் எந்தவொரு உரையும் இருந்ததில்லை.
ஒரு நூல் வெளியீட்டில் அத்தகைய அணுகுமுறையே அந்த நூல் வெளியீட்டுக்கு வருவோரை திருப்தி செய்யும் என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க குற்ற நீதிப் பொறிமுறையோடு இலங்கை குற்ற நீதிப் பொறிமுறையை ஒப்பிட்டு நூல் சார்ந்த சட்டச் சிக்கல்களை தெளிவாக விரிவுரை செய்திருந்தார் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கோசலை மதன்.
உரைகளின் போது உரையொலியை தவிர வேறொரு ஒலியையும் கேட்க முடியாதபடி அங்கு கூடியிருந்த புத்தியீவிகள் தங்களின் நடத்தையினை வெளிப்படுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உடலுக்கும் உள்ளத்திற்கும் உணவிட்ட நிகழ்வு
சமனற்ற நீதி நூல் வெளியீட்டு நிகழ்வினை முடித்துக் கொண்டு யாழ் மருத்துவ பீட கூவர் மண்டபத்தினை வீட்டு வெளியேறும் போது நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு உணவுப் பொதியினை வழங்கியிருந்தனர்.
திராட்சை, பேரீட்சை, மரக்கறிக் கேக், முந்திரி பருப்பு என அதன் உள்ளடக்கம் இருந்தது தனக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருந்ததாக நிகழ்வில் கலந்து கொண்ட பலர் நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல்களின் போது கருத்துரைத்திருந்தனர்.
உடலுக்கும் உள்ளத்திற்கும் உணவிட்ட நிகழ்வது என ஒரு மூதறிஞர் ஒருவர் இது தொடர்பில் தன் கருத்தினையும் பதிவிட்டுள்ளார்.
உடல் நல ஆரோக்கியத்திற்கு பொருத்தமான உணவுகளை நிகழ்வுகளில் பரிமாறப்படுவது மகிழ்வுக்குரிய செயற்பாடாகும்.
பொருத்தமான திட்டமிடல்கள்
வரவேற்பு முதல் வந்தோர் நிகழ்வை முடித்து வெளியேறியது வரையான சகல செயற்பாடுகளிலும் குப்பைகளை வீசிவிட்டுச் செல்லும் சூழல் ஒன்று அங்கு உருவாக்கப்படாது திட்டமிடல்களை மேற்கொண்டிருந்தமையை அவதானிக்க முடிகின்றது.
ஒரு பொது நிகழ்வில் அதிகளவான மக்கள் கலந்து கொள்ளும் போது குழப்பங்களை தவிர்ப்பதற்கும் நிகழ்வின் பின்னரான செயற்பாடுகளை கருத்திலெடுத்து திட்டமிட்டிருந்த முறையும் சிறப்பான முகாமைக்கு எடுத்துக்காட்டாகும் என அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த ஊடகவியலாளரும் சுற்றுச் சூழலியல் ஆர்வலருமான ஒருவரிடம் கருத்துக் கேட்டபோது குறிப்பிட்டிருந்தார்.
இது போல் ஏனைய நூல் வெளியீடுகளும் திட்டமிடப்பட்டால் அது முழுமையான அறிவுசார் சமூகத்தினை உருவாக்கிவிடுவதில் விரைவான பெரு வெற்றியைத் தந்துவிடும்.
ஈழத்தில் எல்லா நிகழ்வுகளும் இது போல் அமைய வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
எப்படி குழப்பங்கள் தோன்றுகின்றன
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல ஆயிரம் மக்கள் கலந்து கொள்ளும் கோவில் திருவிழாக்களில் குழப்பங்கள் நடந்ததில்லை.
பெருந்திரளான மக்கள் கூடி அஞ்சலிக்கும் மாவீரர் நாள் நிகழ்வுகளும் கூட மக்களால் குழப்பங்கள் ஏற்படுவதில்லை.
அப்படியிருக்கையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் மட்டும் குழப்பம் ஏற்பட்டிருந்தால் அது ஏற்பாட்டாளர்களின் திட்டமிடலற்ற செயற்பாட்கவே இருக்கும்.
ஈழத்தமிழர்களின் தன்னிச்சையான மரியாதைப் பண்பாடு சிறப்பாக வெளிப்படும் நாளாக மாவீரர் நாள் நிகழ்வுகளில் அவர்களின் செயலாற்றுகைக்கு சான்றாக அமைந்துவிடுகின்றன.
யாழ்ப்பாணத்து வீதிகளில் குப்பைகள் எப்படி வந்தன?
சிறந்த வெளிப்பாடுகளை வெளிக்காட்டியிருந்தது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் நடைபெற்ற நூல் வெளியிடு.
விருந்தினர்கள் உணவுகளை நுகர்ந்து கொண்ட பின்னர் கழிவுகளை சிறப்பான முறையில் அகற்றும் பொறிமுறை பேணப்பட்டிருந்தது.
எனினும் யாழ்ப்பாணத்தின் பல வீதிகளில் குப்பைகள் பொருத்தமற்ற முறையில் வீசப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
உயர்நிலை செயற்பாடுகளில் சிறப்பான வெளிப்படுத்தல்களின்.மூலம் ஏன் யாழ்ப்பாணத்தினை தூய்மைமிக்க இடமாக பேசமுடியவில்லை என்ற கேள்வி எழுவதும் இங்கே சுட்டிக்காட்டல் பொருத்தமானதாகும்.