கோவிட் சடலங்களை அடக்கம் செய்யும் வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கை வெளியீடு
கோவிட் சடலங்களை அடக்கம் செய்ய வேண்டுமாயின் உறவினர்கள் உரிய முறையில் எழுத்து மூலம் உடனடியாக கோரிக்கை விடுக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் காரணமாக உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பிலான வழிகாட்டல்கள் அடங்கிய ஊடக அறிக்கையை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தங்களது உறவினரின் சடலத்தை அடக்கம் செய்ய விரும்புவதாக உடனடியாக உயிரிழந்த வைத்தியசாலையின் பிரதானிக்கு அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் உறவினர்கள் சடலத்தை வைப்பதற்கான சவப்பெட்டியொன்றை உடனடியாக வழங்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவப்பெட்டியில் இடப்பட்ட சடலங்கள் கொழும்பில் காணப்படும் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அல்லது வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலங்கள் அடக்கம் செய்யப்படும் இடமாக இரணைதீவினை உயிரிழந்தவர் சிகிச்சை பெற்ற வைத்தியசாலையின் பிரதானி குறிப்பிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சடலங்கள் நாள் தோறும் அதிகாலை 5.30 மணிக்கு நாச்சிகுடா படகு துறைக்கு போக்குவரத்துச செய்யப்படும்.இந்த சடலங்கள் அதிகாரம் பெற்ற அதிகாரி அல்லது பொதுச் சுகாதார பரிசோதர் ஒருவரினால் பொறுப்பேற்றுக்கொள்ளப்படும்.
கோவிட் சடலங்கள் பாதுகாப்புத் தரப்பினர், உயிரிழந்தவரின் இரண்டு உறவினர்கள் மற்றும் சுகாதார அதிகாரி அல்லது பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவரின் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
சடலங்களை போக்குவரத்து செய்யும் நபர்கள் சகல விதமான பாதுகாப்பு அங்கிகளையும் அணிந்து பாதுகாப்பான முறையில் சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சடலங்கள் இரணைதீவில் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தனவின் கையொப்பத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.