முச்சக்கரவண்டி சாரதிகளின் வயதெல்லை அதிகரிப்பு தொடர்பில் மக்கள் கூறும் விடயம்
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான வயதெல்லை தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், தற்போது இந்தத் தொழிலை நம்பியுள்ளவர்கள் வருமானத்தை இழக்கும் நிலை ஏற்படும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இன்னும் சிலர் அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் வரவேற்கத்தக்கது என குறிப்பிடுகின்றனர்.
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான வயதெல்லை
இது தொடர்பில் மக்கள் தெரிவிக்கையில், இன்றைய சூழ்நிலையில் பல இளைஞர்கள் கல்வியை இடைநிறுத்திய பின்னர், விரைவாக சுயதொழிலில் ஈடுபடும் நோக்கில் முச்சக்கரவண்டிகளை கொள்வனவு செய்து சாரதிகளாக பணியாற்றத் தொடங்குகின்றனர்.
எனினும், குறைந்த வயதிலேயே வீதிப் போக்குவரத்தில் ஈடுபடும் சிலரிடம் போதிய பொறுமை, பக்குவம், அனுபவம் மற்றும் பொறுப்புணர்வு இல்லாத நிலை காணப்படுகிறது.

இதன் காரணமாக வீதி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் மற்றும் நிரந்தர உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், பெற்றோரின் பணத்தை பயன்படுத்தி முச்சக்கரவண்டிகளை கொள்வனவு செய்து தொழிலில் ஈடுபடும் சில இளைஞர்கள், எதிர்பார்த்த வருமானத்தை பெற முடியாமல் பொருளாதார ரீதியிலும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
40 வயதுக்கு பின்னர் ஒருவரிடம் வாழ்க்கை அனுபவம், பொறுமை, பக்குவம் மற்றும் பொறுப்புணர்வு அதிகரித்திருக்கும் என்பதால், முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான வயதெல்லையை அதிகரிப்பதன் மூலம் வீதி பாதுகாப்பை மேம்படுத்த முடியும்.
அத்துடன், எவரும் நினைத்தவுடன் முச்சக்கரவண்டியை கொள்வனவு செய்து சாரதியாக தொழிலில் ஈடுபடுவதால், வீதிகளில் முச்சக்கரவண்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மாற்றுத் தொழில் வாய்ப்புகள்
அத்துடன் தொழிலை நம்பி வாழும் சாரதிகளும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். எனினும், அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் சில இளைஞர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
கல்வியில் அல்லது பரீட்சைகளில் வெற்றிபெற முடியாத நிலையில், சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்று முச்சக்கரவண்டி சாரதிகளாக சுயதொழிலில் ஈடுபட்டு வரும் பல இளைஞர்கள் உள்ளனர்.

இவ்வாறான நிலையில், வயதெல்லை தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், தற்போது இந்தத் தொழிலை நம்பியுள்ளவர்கள் வருமானத்தை இழக்கும் நிலை ஏற்படக்கூடும்.
எனவே, முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான வயதெல்லையை அதிகரிப்பதற்கு முன்னர், இளைஞர்களுக்காக மாற்றுத் தொழில் வாய்ப்புகள் மற்றும் சுயதொழில் திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும்.
இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, அதனைத் தொடர்ந்து போக்குவரத்து மற்றும் சாரதி உரிமம் தொடர்பான புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தினால், அது அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக அமையும் என குறிப்பிட்டுள்ளனர்.
குற்றவாளிகளோடு வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அரசியல்வாதிகள்! ஆதாரங்களை அழிக்க அரங்கேற்றிய துப்பாக்கிச்சூடுகள்
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9 Evening