நுவரெலியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்
நுவரெலியா பிரதேச செயலகத்தில் வழங்கப்படும் இரண்டாம் கட்ட புதிய அஸ்வெசும நலன்புரி நன்மைகளுக்கான விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
சனி மற்றும் ஞாயிறு தினங்கள் விடுமுறை என்பதால் இன்றையதினம் (02.12.2024) திங்கட்கிழமை நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு முன்னால் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்வதற்காக பிரதேச மக்கள் இவ்வாறு ஒரே நேரத்தில் கூடியுள்ளனர்.
எனினும், குறித்த அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் வரிசையினை நெறிப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் திணைக்கள உத்தியோகத்தர்கள் யாரும் செயற்படவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சீரான காலநிலை
அத்துடன், குறித்த நலன்புரி நன்மைகளை பெற்றுக்கொள்வதற்கு சரியான நடைமுறை பின்பற்றபடவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் நிலவிய வானிலை சீற்றத்தினால் பெய்த கடும் மழை காரணமாக கடந்த வாரங்கள் பொது மக்கள் வருகை சற்று குறைவாக இருந்தது.
தற்போது சீரான காலநிலை நிலவி வருவதனால் பலரும் வருகை தந்ததன் காரணமாக இவ்வாறு நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |