பயங்கரவாத தடைச்சட்ட வர்த்தமானி உள்ளடக்கங்களை ஐரோப்பிய ஒன்றியம் விமர்சித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில், இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது.
எனினும் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட விடயங்களில் முக்கியமான கூறுகள் உள்ளடக்கப்படவில்லை என்பதை ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனையடுத்து பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தத்தில் சர்வதேச நியமங்களுக்கு முழுமையாக இணங்குவதற்கான மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றின் கூட்டு ஆணைக்குழுக் கூட்டம் நேற்று பிரஸ்ஸல்ஸில் இடம்பெற்றது.
இதன்போது இருதரப்பு உறவுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டதுடன், இருதரப்பு நலன்கள் - ஆளுகை, நல்லிணக்கம், மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக இரு தரப்பும் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக்கூட்டத்தில், ஜனநாயகம், ஆட்சிமுறை, சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், சிறுபான்மையினர், பெண்கள், சிறுவர்கள், தொழிலாளர் உரிமைகள், கருத்து சுதந்திரம் உட்பட்ட விடயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளன.
இலங்கை காவல்துறையின் நடவடிக்கைகளை கவனத்தில் எடுத்துக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாட்டைத் தொடர்ந்து குறைக்குமாறும் கோரியுள்ளது.
அத்துடன் எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பிணையில் விடுவிப்பதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை அரசாங்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.



