பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளருக்கு பிணை!
இலங்கையின் இணையத்தளம் ஒன்றின் ஊடகவியலாளரான கீர்த்தி ரட்நாயக்க, இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
தாக்குதல் ஒன்று குறித்து, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கு தகவல் வழங்கியமை தொடர்பிலேயே அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் அவரை இன்று நீதிமன்றம் 50ஆயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதித்தது.
நீதிமன்ற விசாரணையின்போது, கீர்த்தி ரட்நாயக்கவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், தமது கட்சிக்காரர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமையால், அவரை குற்றங்களில் இருந்து விடுவிக்கவேண்டும் என்று கோரினார்கள்.
பிணையில் அனுமதிக்கப்பட்ட கீர்த்தி, ஏற்கனவே இலங்கை விமானப்படையில் சேவையாற்றியவர்.
அவரை கொழும்பு குற்றப்பிரிவே 2021 ஆகஸ்ட் 14ஆம் திகதியன்று கைதுசெய்தது.
தமது கைது மற்றும் தடுத்து வைப்பு என்பவற்றை ஆட்சேபித்து கீர்த்தி ரட்நாயக்கவும் உயர்நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.



