இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கையால் உயிரிழந்த தோட்ட தொழிலாளர்களுக்கு இழப்பீட்டுத் வழங்க ஏற்பாடு
கண்டி, கலாபொக்க – நெல்லிமலை தோட்டத்தில் உயிரிழந்த இரு தொழிலாளர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
2023 ஜுலை 6 ஆம் திகதி நெல்லிமலை தோட்டத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சீரற்ற காலநிலையில் தொழில்செய்யும் போதே திடீர் அனர்த்தத்தில் சண்முகம் விஜயலட்சுமி, ஸ்ரீகந்தராஜ் புவனேஸ்வரி ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், தொழில் செய்யும்போது இவர்கள் உயிரிழந்ததால் அவர்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொடுக்கும் முயற்சி இடம்பெற்றது. இது விடயத்தில் அரச பெருந்தோட்ட யாக்கம் இழுத்தடிப்பு செய்துவந்துள்ளது.
இழப்பீடு கிடைப்பதில் இழுபறி
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் தொழில் அமைச்சு மற்றும் அதன் செயலாளரின் கவனத்துக்கு இ.தொ.காவின் உப தலைவர் பாரத் அருள்சாமி கொண்டு வந்துள்ளார்.
இதனையடுத்து உரிய இழப்பீட்டை உடன்வழங்குமாறு தொழில் இழப்பீடு தொடர்பான ஆணையாளர், அரச பெருந்தோட்ட யாக்கத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எனினும், இழப்பீடு கிடைப்பதில் இழுபறி நிலவியது. அதன்பின்னர் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் தலையிட்டு, இழப்பீட்டை ஒரே தடவையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவ்வாறு தொழிலாளர் பக்கம் நின்று கடைசிவரை காங்கிரஸ் செயற்பட்டிருந்தாலும், கண்டி மாவட்டத்தில் உள்ள வங்குரோத்து நாடாளுமன்ற உறுப்பினர் பெயர்போடும் அரசியலில் ஈடுபட்டுள்ளார் என்று பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
அவர் பெயர், புகழ் தேடுவது எமக்கு பிரச்சினை அல்ல, ஆனால் உண்மையை மூடிமறைத்து, அடுத்தவர் விதைத்ததை அறுவடை செய்ய முற்படுவது ஏற்புடையது அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
அப்பாவி தொழிலாளர்களை வைத்து அரசியல் செய்யாமல் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைளை முன்கொண்டு வந்தால் கண்டி மாவட்டத்தில் மக்களின் நிலைமை என்றோ மாறியிருக்கும் எனவும் பாரத் அருள்சாமி மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |