இழுத்தடிப்பு செய்யப்படும் மாகாண சபை தேர்தல்: எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட தகவல்
"மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசுக்கு எவ்வாறு அழுத்தம் பிரயோகிப்பது என்பது பற்றி ஆராயும் நோக்கில் தமிழ்த் தரப்புக்களால் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புக்களில் பங்கேற்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆனால் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்துக் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பு எனில் அதில் பங்கேற்பது குறித்து கட்சியே தீர்மானிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலம் நடத்தப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், அதற்குரிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கிலும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
தேர்தல் இலக்கு
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், சமத்துவக் கட்சியின் தலைவர் சந்திரகுமார் மற்றும் முன்னாள் இணைந்த வடக்கு - கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்குரிய அழுத்தங்களைப் பிரயோகிப்பதுடன் அந்த தேர்தலை இலக்காகக்கொண்டு தமிழ்த் தரப்புக்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்தச் சந்திப்பில் பங்கேற்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அந்தக் கட்சியின் சார்பில் எவரும் பங்கேற்றிருக்கவில்லை.
அதனையடுத்து தனிப்பட்ட சில காரணங்களால் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் சந்திப்புக்களில் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொள்வர் என எதிர்பார்ப்பதாகவும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
எதிர்வரும் கூட்டங்கள்
இவ்வாறானதொரு பின்னணியில் அந்த கூட்டத்தில் பங்கேற்காமைக்கான காரணம் குறித்து சுமந்திரனிடம் வினவியபோது, அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்குத் தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இருப்பினும் அன்றைய தினம் கொழும்பில் இருக்க வேண்டியிருந்த காரணத்தால் அதில் பங்கேற்க முடியவில்லை எனவும் பதிலளித்தார்.
அவ்வாறெனில் இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் கூட்டங்களில் கலந்துகொள்வீர்களா எனக் கேள்வி எழுப்பியபோது, அதற்குச் சுமந்திரன் பின்வருமாறு பதிலளித்தார்.
அரசுக்கு அழுத்தம்
"மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசுக்கு எவ்வாறு அழுத்தம் பிரயோகிப்பது, அதனை முன்னிறுத்தி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து நாம் தமிழ்த் தரப்புக்களுடன் மாத்திரமன்றி கொழும்பை மையமாகக்கொண்டு இயங்கும் அமைப்புக்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினருடன் ஏற்கனவே கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றோம்.
அதற்கமைய தமிழ்த் தரப்புக்களால் இந்த நோக்கத்துடன் ஒழுங்கு செய்யப்படும் கலந்துரையாடல்களில் பங்கேற்போம்.
இருப்பினும் அவை எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்புக்களாக இருந்தால், அவற்றில் பங்கேற்பது தொடர்பில் கட்சியுடன் கலந்துரையாடியதன் பின்னரே தீர்மானிக்க முடியும்." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



