மாகாண சபை தேர்தலை விரைவுபடுத்த ஒன்றிணையுமாறு டக்ளஸ் அழைப்பு
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில் தமிழ் தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்மூலம் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவுபடுத்த முடியும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் அனைத்து தரப்புக்களையும் ஒன்றிணைத்து செயற்படுத்துவதற்கான ஆர்வத்தினை வெளியிட்டு வருகின்றனர்.
மாகாணசபை

இந்த அரசியல் சூழலை தமிழ் தரப்புக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறுகிய நலன்களையும், தேர்தல் அரியல் பற்றிய சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அனைத்து தமிழ் தரப்புக்களினதும் முயற்சிகள் மற்றும் தியாகங்களின் பலனாக கிடைத்த மாகாணசபைகளை செயற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றிணைந்து செயற்பட அனைவரும் முன்வரவேண்டும்.
அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாண சபைகளை செயற்படுத்துவதன் மூலம் அதனைப் பாதுகாத்துக் கொண்டு, ஒவ்வொரு தரப்பினரும் தாங்கள் எதிர்பார்க்கின்ற அபிலாசைகளை வென்றெடுப்பது பற்றி சிந்திப்பதே ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்கும்.
கடந்த காலங்களில் கிடைத்த சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டமையைப் போன்று, தற்போதைய அரசியல் சூழலையும் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள அனைவரும் முன்வரவேண்டும்.”என கூறியுள்ளார்.
இதேவேளை வடக்கில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகள் தொடர்பாக சிலரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி, மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
குறித்த விசாரணை சில விடயங்களை தனக்கு உணர்த்தியுள்ளதாகவும், உரிய அனுமதிகளை பெற்றுக்கொள்வதற்கு எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளாது, இலங்கை கடல் பரப்பில் தன்னிச்சையாக அமைக்கப்பட்டுள்ள பட்டி வலைகள், கடலட்டைப் பண்ணைகள் போன்ற அனைத்தும் அகற்றப்பட்டு, அனைத்து தொழில் செயற்பாடுகளையும் உரிய நியமங்களுக்கு அமைய ஒழுங்குபடுத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 400 கடலட்டைப் பண்ணைகள் இருக்கின்ற போதிலும், இரண்டு பண்ணைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக நக்டா அதிகாரி தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
குறித்த செய்தி தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரியுடன் கலந்துரையாடியதாகவும், முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட கிராஞ்சி பகுதியில் எத்தனை பண்ணைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாகவே இரண்டு பண்ணைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக பதில் அளித்ததாகவும், கிளிநொச்சி மாவட்டம் தொடர்பாக எந்தவிதமான கேள்விகளும் கேட்கப்படவில்லை என்பதை, குறித்த அதிகாரி தனக்கு தெளிவுபடுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
விசாரணை செயற்பாட்டை சரியாக கிரகிக்காத சிலரினால் பொறுப்பற்ற
முறையில் தவறான கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாகவே தான்
கருதுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
May you like this Video