வவுனியாவில் எரிபொருள் விநியோக அட்டை வழங்க தீர்மானம்(Photos)
வவுனியாவில் எரிபொருள் அட்டை விநியோகிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடி மற்றும் பங்கீடு தொடர்பில் மக்களுக்கு இலகுவான பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற குழுக்கூட்டதில் எரிபொருள் அட்டை விநியோகிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் குழு கூட்டம்
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் மற்றும் மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர ஆகியோரின் இணை தலைமையில் இந்த கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் எரிபொருள் கள்ள சந்தைகளின் செயற்பாட்டை கட்டுப்படுத்தல் பற்றியும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் பெற்றுக்கொள்வதில் உள்ள நெருக்கடி நிலை பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எரிபொருள் தேவையானவர்களுக்கு முறையாக பங்கீடு செய்யப்படாமை தொடர்பில் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மாவட்ட அரச அதிபர் மற்றும் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியிருந்தனர்.
மேலும், கருப்பு சந்தை உருவாக்கம் மற்றும் அதனை கட்டுப்படுத்த வேண்டிய தேவை சம்பந்தமாகவும் தெளிவுபடுத்தியிருந்தனர்.
இது குறித்து மாவட்ட அரச அதிபர் கருத்து தொிவிக்கையில், "சிறுபோக நெற்செய்கை அறுவடைக்கு தேவையான டீசலை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினாா். அத்தியாவசிய தேவையற்ற கனரக வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
இந்த நடவடிக்கையின் ஊடாக தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடிவதுடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிக வாகனங்கள் நிறுத்தப்படுவதை குறைக்கவும் முடியும்.
மேலும், கருப்பு சந்தை வியாபாரத்தை கட்டுப்படுத்த முடியும்," எனவும் அவா் வலியுறுத்தினார்.
இதன் போது மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு அமைவாக சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
தீர்மானம்
இதற்கிணங்க, முதல் கட்டமாக எரிபொருள் வழங்குவதற்கான அட்டை குடும்பத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் பிரதேச செயலகம் மற்றும் கிராம அலுவலகர்கள் ஊடாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அரச அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பலரும் இந்த கலந்துரையாடலின் போது தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
மேலும், வவுனியா மாவட்ட மக்கள் அமைப்பின் சார்பில் வேவ்வேறு சங்க பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.