மட்டக்களப்பின் பல பகுதிகளில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுப்பு
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி
மட்டக்களப்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் மேதினத்தை முன்னிட்டு காந்தி பூங்காவிற்கு முன்னால் இன மத பேதமின்றிய மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் என்ற தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குணரட்ணம் கிரிதரன் அழைப்பு விடுத்ததையடுத்து மட்டக்களப்பு - காந்தி பூங்காவிற்கு முன்னால் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் இன்று காலை 10 மணிக்கு ஒன்றிணைந்தனர்.
இதனையடுத்து கோட்டா வீட்டில் நாங்கள் றோட்டில், விவசாயத்தை விற்றுவிட்டு மன்னிப்பு கேட்பது சரியா, தொழிலாளர் உரிமை மதிக்கப்படவேண்டும், நாட்டை விற்ற ராஜபக்ச குடும்பம், வெளியேறு நாங்கள் சந்தோசமாக வாழவிடு, அழிக்காதே அழிக்காதே விவசாயத்தை அழிக்காதே, போன்ற பல்வேறு வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நகர் பஸர் வீதியில் ஊர்வலமாக மாட்டுவண்டியுடன் ஆரம்பித்து நகர் மணிக்கூட்டுக் கோபுர சுற்று வட்டத்தை வந்தடைந்து காந்தி பூங்காவிற்கு முன்னால் அரசு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சர்வதேச மேதின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு - கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள மீனிசை பூங்காவில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் உபதலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராஜா தலைமையில் இந்த மேதின நிகழ்வுகள் நடைபெற்றன.
மேதின நிகழ்வின் ஆரம்பத்தில் கல்லடி பாலத்திலிருந்து தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தும் வகையிலான பேரணி நடைபெற்றது.
இதன்போது பல்வேறு பதாகைகள் கொண்ட வாகனங்களும் பேரணியில் கலந்துகொண்டன. இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம், இலங்கை சமுர்த்தி கணினி உதவியாளர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களும் இணைந்திருந்தன.
இதன்போது மட்டக்களப்பு அரசடியிலிருந்து ஆரம்பித்த பேரணியானது கல்லடிப்பாலம் ஊடாக மீனிசை பூங்கா வரையில் சென்றதுடன், அங்கு நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்படப் பிரதேச சபையின் தவிசாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
செய்தி - குமார்



