கொழும்பில் உச்சகட்ட பதற்ற நிலை! பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள் (Live)
கொழும்பு - பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
அலுவலகத்திற்குள் பெருமளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.
ஐந்தாம் இணைப்பு
கொழும்பு - பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலக பகுதியில் சற்றுமுன் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரரொருவர் காயமடைந்துள்ளார்.
அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தொடர்ச்சியாக கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், வானை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி இளைஞரொருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த இளைஞர் நோயாளர்காவு வண்டி மூலமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
நான்காம் இணைப்பு
கொழும்பு - பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் பிரதான நுழைவாயில் கதவினை உடைக்கும் முயற்சியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் கொழும்பில் பிளவர் வீதியிலும், காலிமுகத்திடல் பகுதியிலும் உலங்குவானூர்திகள் வட்டமிட்டு வருகின்றன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆயுதம் ஏந்திய படையினர் குறித்த பகுதியில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் இணைப்பு
கொழும்பிலுள்ள பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அப்பகுதியில் பாரியளவான மக்கள் கூட்டம் திரண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கிறது.
இரண்டாம் இணைப்பு
கொழும்பு - பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது பிரதமரின் இல்லத்தை நோக்கி படையெடுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கொழும்பு - பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் சற்றுமுன் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் இன்று காலை நாட்டிலிருந்து அவர் வெளியேறியிருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தியும், கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக தற்போது ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
களமிறக்கப்பட்டுள்ள அதிரடிப்படை
அப்பகுதியில் பெருந்திரளான அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் குறித்த இடத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் கொழும்பின் கள நிலைமையும் சூடுபிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.