மட்டக்களப்பில் கிராம உத்தியோகத்தரை இடமாற்றுமாறு கோரி போராட்டம்
மட்டக்களப்பில் அனர்த்தினால் பாதிக்கப்பட்ட புன்னைச்சோலை கிராம சேவகர் பிரிவிலுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் கிராம உத்தியோத்தரை இடம் மாற்றுமாறும் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று (15) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கை தொடர்பாக விசாரணை செய்து பாதிப்பு தொடர்பாக உண்மை தன்மை அறிந்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு வழங்கிய உறுதிமொழி அடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
போராட்டம்
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்ததினால் புன்னைச்சோலை கிராமத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் பணம் வழங்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் சம்பவ தினமான இன்று காலை 10 மணிக்கு புன்னைச்சோலை பகுதியில் ஒன்று திரண்டனர்.

இதனையடுத்து அங்கு ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான பெண்கள் கிராம உத்தியோகத்தரை இடமாற்றுமாறு , பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் பணம் வழங்குமாறு கோரி அங்கிருந்து போராட்ட ஊர்வலம் ஆரம்பித்து மாமாங்கம் ஆலய வீதி வழியாக சென்று பார்வீதியை அடைந்து அங்கிருந்து அரசடி வீதி சுற்று வட்டத்தை அடைந்து அங்கிருந்து நகர் மணிக்கூட்டு கோபுரத்தை சென்று அங்கிருந்து மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தை சென்று அதனை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து அங்கு சென்ற தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலந்துரையாடிதுடன் கிராம உத்தியோகத்தர் தொடர்பான தீர விசாரணை செய்வதுடன் நிவாரணம் தொடர்பாக உண்மை தன்மையை கண்டறிந்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தெரிவித்த வாக்கு உறுதி ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.



