கொழும்பில் போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் (Video)
கொழும்பு - புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்ட பகுதியில் போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது.
போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வண்ணம் வீதியில் இறங்காமல் ஏதாவதொரு தனி இடத்தில் போராட்டத்தை முன்னெடுக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
அல்லது போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்கள், தம்மால் போராட்டத்தை நிறுத்த முடியாது என கூறி தொடர்ந்து வீதியை மறித்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டதால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மூன்றாம் இணைப்பு
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஸ்ரீலங்கா டெலிகொம் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா டெலிகொம்மின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக திரண்டுள்ளனர்.
இந்த நிலையில் கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா டெலிகொம்மின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டு வருகிறது.
பொதுச் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஸ்ரீலங்கா இன்சுயூரன்ஸ் ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது.
தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் ஆகியன இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன.
வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கு எதிர்ப்பு
வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இன்றைய ஆர்ப்பாட்டத்தில் அரச மற்றும் தனியார் துறையின் பல பிரிவுகளை சேர்ந்தவர்களும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவன ஊழியர்களும் பங்கேற்பு
அத்துடன் நாட்டின் பல பகுதிகளிலுள்ள நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதாக தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
சில நிறுவனங்களின் ஊழியர்கள் தமது உணவு நேரத்தில், தமது பணியிடங்களுக்கு முன்பாக அல்லது தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் தமது எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.










