கொழும்பில் டெக்னிக்கல் சந்திக்கு அருகில் அமைதியின்மை (Live)
கொழும்பு - டெக்னிக்கல் சந்திக்கு அருகில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், நாட்டில் காணப்படுகின்ற பொருளாதார நெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு கோரியும் குறித்த டெக்னிக்கல் சந்திக்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக குறித்த பகுதிக்கு வந்துள்ளனர்.
இவ்வாறான சூழலில் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தை நோக்கி குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக செல்ல முற்பட்ட போது பொலிஸார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை மற்றுமொரு குழுவொன்று புதுக்கடை நீதிமன்ற பகுதியில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கொழும்பு - டெக்னிக்கல் சந்தியில் திடீரென ஏராளமான பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் நீர்த்தாரை பிரயோக வண்டி மற்றும் பொலிஸ் வண்டிகள் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கையொன்று கொழும்பு டெக்னிக்கல் பகுதியை முற்றுகையிட்டு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்காரணமாகவே அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




