திலீபன் சிலையை அகற்றிய பொலிஸார்: வடக்கில் வெடித்த போராட்டம் - திரண்ட மக்கள்
அம்பாறை
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து அம்பாறையின் தம்பிலுவில் மத்திய சந்தை பகுதியில் பேரெழுச்சியோடு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தின்போது வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினரால் வெளியிடப்பட்ட கண்டன அறிக்கையில், கடந்த பல தசாப்தங்களாகத் தமிழ் மக்கள் சந்தித்து வரும் தொடர் அநீதிகளின் ஒரு அங்கமாகவே இச் சம்பவத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.
காணாமலாக்கப்பட்ட எமது சொந்த உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மைக்கான நீதியைத் தேடி, வீதிகளில் இறங்கி கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் போராடி வருகிறோம். எமது ஆறாத் துயரத்திற்கு நீதி வழங்கத் தவறிய இலங்கை அரசும் பொலி்ஸாரும், தற்போது எமது புனிதமான நினைவேந்தல் உரிமைகளையும் பறிக்கத் துணிந்துள்ளனர்.
அடக்குமுறை
யாழ்ப்பாணத்தின், நல்லூர் மண்ணில் பலவந்தமாக அகற்றப்பட்ட தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவச் சிலையை, எவ்வித நிபந்தனையுமின்றி, பொலிஸாரின் தலையீடுகளின்றி உடனடியாக மீண்டும் அதே இடத்தில் மீள நிறுவவேண்டும்.
தமிழ் மக்கள் தமது வரலாற்றையும், இன விடுதலைக்காகத் தம் உயிர்களைத் தியாகம் செய்தவர்களையும் நினைவுகூரும் ஜனநாயக உரிமையில் பொலிஸாரும் பாதுகாப்புத் தரப்பினரும் தலையிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
நினைவேந்தல் அடையாளங்களை அழிப்பதன் மூலமும், அமைதி வழியில் போராடும் மக்கள் மீது அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலமும் தமிழ் மக்களின் நீதிக்கான குரலை முடக்கிவிட முடியாது என்பதைப் புரிந்துகொண்டு, இத்தகைய அடக்குமுறைகளை அரசு உடனடி நடைமுறைக்கு வரும் வகையில் கைவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார்
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து மன்னாரில் போராட்டம் ஒன்று இன்று(28) திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பஜார் பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலை அடிக்கு முன்பு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
நினைவேந்தல் உரிமை
திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், பொலிஸாரின் செயலைக் கண்டித்தும், தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதிய பதாதையை ஏந்தியவாறு ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதய சந்திரா,சங்க பிரதிநிதிகள்,மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மாக்கஸ் அடிகளார்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தகவல் - ஆசிக்
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தியாக தீபத்தின் சிலையை பொலிஸார் பெயர்த்து எடுத்து சென்றமையை கண்டித்தும், சிலையை மீள அவ்விடத்தில் நிறுவ வேண்டும் எனவும் யாழில் இன்று(28) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தியாக தீபத்தின் நினைவாலயம் முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இறுதி நாள் நிகழ்வுகள்
தியாக தீபத்தின் நினைவாலயம் பகுதியில் தியாக தீபத்தின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நாள் நிகழ்வான கடந்த 15ஆம் திகதி சிலை வைக்கப்பட்டு , தொடர்ந்து 12 நாட்கள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று, கடந்த சனிக்கிழமை இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நினைவிவாலயத்திற்கு யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான சுமார் 20க்கும் மேற்பட்ட பொலிஸார் , இரண்டு பொலிஸ் வாகனங்களில் வந்து சிலையை அங்கிருந்து பெயர்த்து எடுத்து சென்றுள்ளனர்.
பொலிஸாரினால் சிலை பெயர்த்து எடுத்து செல்லப்பட்டதனை கண்டித்தும் , மீள அந்த சிலையை அவ்விடத்தில் நிறுவ வேண்டும் என கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பொங்குதமிழ் நினைவாலயத்தில் ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டமானது வவுனியா பழைய பேருந்து நிலையம் வரையில் இடம்பெற்றது.
இதேவேளை திருகோணமலை சிவன் கோயிலடியிலும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
மட்டக்களப்பின் காந்தி பூங்கா பகுதியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருமளவு உணர்வாளர்கள் கலந்துகொண்டு தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவச் சிலை அகற்றப்பட்டமைக்குத் தமது கண்டனத்தைத் தெரிவித்துனர்.
அஹிம்சை போதித்தவரின் சிலையை அகற்றியமை இனவாதத்தின் உச்சம்... கடுமையாக சாடிய முன்னாள் எம்பி கஜேந்திரன்



