தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபடும் உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்
திருச்சி மத்திய சிறையில் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி ஈழ அகதிகளின் உண்ணாவிரத போராட்டம் கடந்த ஒரு வாரகாலமாக முன்னெடுக்கப்படுகின்றது.
தமக்கு எவ்விதமான சலுகைகளும் வழங்கப்படவில்லை, தம்மை யாரும் கவனிப்பதும் இல்லை தங்களை விடுவிக்குமாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் யாரும் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிவித்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபடும் உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். நவாலி பகுதியில் தடுத்து வைக்கப்பட்டவர்களது உறவினர்கள் நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
யாழில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், எமது பிள்ளைகள் அங்கு சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கின்றனர் மூன்று நாட்களில் விடுதலை செய்வதாக கூறித்தான் கைது செய்தனர்.
அதன் பின்னர் அவர்களுக்கு மாற்று உடை கூட வழங்காமல் நூறு நாட்கள் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தினார்கள். பின்பு வழக்கு விசாரணை செய்து விடுவதாக கூறி திருச்சி மத்திய சிறைச்சாலை சிறப்பு முகாமில் அடைத்தார்கள்.
ஆனால் இதுவரை காலமும் அவர்களை விடுதலை செய்யவில்லை. தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் மு.க.ஸ்டான்லின் மக்களுக்கு நன்மை செய்வதாக கூறிப் பதவியேற்றார்.
இந்த நிலையில் எமது உறவுகளின் மீது அவர் கருணை காட்டாதது ஏன்? இலங்கை அரசும் தமிழக அரசும் ஒன்றிணைந்து எமது உறவுகளை விடுதலை செய்ய வழி சமைக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.


