திருகோணமலை- சீதனவெளி கிராம மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்
திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தமது கிராமமான சீதனவெளி கிராமத்திற்கு சுத்தமான குடிநீர் வசதியை ஏற்படுத்தித்தருமாறு வலியுறுத்தி கிராம மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்று (11.03.2024) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மூதூர் புளியடி சந்தியிலிருந்து பிரதான வீதியூடாக நடைபவணியாக மூதூர் பிரதேச சபைக்குள் நுழைந்து அங்கு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கையளிக்கப்பட்ட மனு
அதன் பின் மூதூர் பிரதேச சபையிலிருந்து பிரதேச செயலகம் வரை நடைபவணியாக பிரதேச செயலக வளாகத்தினுள் நுழைந்து அங்கு தமது கோரிக்கைகளை முன்வைத்து கோசங்களை எழுப்பியுள்ளனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு சிலர் மூதூர் பிரதேச செயலாளரை சந்தித்து பேசியதோடு மனுவொன்றையும் கையளித்துள்ளனர்.
இது தொடர்பான விடயத்தில் உரிய தரப்பினரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்வதாக மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் வாக்குறுதி அளித்ததையடுத்து அங்கிருந்து களைந்து சென்றுள்ளனர்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு 2012 இல் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மூதூர் -சீதனவெளி கிராமத்தில் 120 குடும்பங்களை சேர்ந்தோர் வசித்து வருகின்றனர்.
இந்த பிரதேசத்தில் இன்னும் சுத்தமான குடிநீர் வசதி இல்லை.இதற்காகவே தமது கோரிக்கை முன்வைத்து சீதனவெளி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |