வடக்கு மாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுப்பு
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று (30) கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையிலே, கிளிநொச்சியில் தங்கள் கையினால் கையளித்த தங்களது உறவுகளை மீட்டு தருமாறு கோரியும் சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா
போர்க் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டதாக சில இராணுவத் தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத்தடைவித்துள்ளதன் மூலம் இனப்படுகொலை ஒன்று இங்கு நடந்துள்ளதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதிக்கு முன்பாக இன்று (30.03) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சங்கத்தினர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கை அரசானது நீண்ட காலமாக பொறுப்புக் கூறலில் இருந்து தவறியுள்ளது. இதனால் நாம் சர்வதேச நீதி கோரி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.
பயணத்தடை
போர்க் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டதாக சில இராணுவத் தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத்தடைவித்துள்ளதன் மூலம் இனப்படுகொலை ஒன்று இங்கு நடந்துள்ளதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை உணர முடியும். இவ்வாறு தடை விதிக்கப்பட வேண்டிய இன்னும் பல இராணுவத்தினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளும் உள்ளனர். அவர்கள் மீதும் இவ்வாறான தடைகளை விதிக்க வேண்டும்.
அனைத்துலக நாடுகளும் இந்த பயணத்தடைகளை விதித்து குற்றம் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி சர்வதேச பொறிமுறையூடாக எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும்.
இதுவே எமது எதிர்பார்ப்பு. இதேவேளை, 19 காணாமல் போன உறவுகள் உயிருடன் இருப்பதை தாம் கண்டுபிடித்துள்ளதாக காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தினர் அண்மையில் கூறியுள்ளனர். அவர்கள் உண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோர் இல்லை.
நாம் தந்த சாட்சியங்களில் ஒன்றை கூட அந்த அலுவலகத்தினர் கண்டுபிடிக்கவில்லை. மாறாக சர்வதேசத்துக்கு அப்பட்டமான பொய்களை சொல்கின்றனர். பொய்யான அறிக்கைகளை அவர்கள் வெளியிடுகின்றனர்.
எனவே, எமது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தநிலையில் சர்வதேச நீதிப் பொறிமுறையூடாகவே எமக்கான நீதியை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

