அக்கராயன்குளம் கமநல சேவை நிலையத்திலிருந்து மாயமான உரம்! உடனடி விசாரணை மேற்கொள்வதாக அரசாங்க அதிபர் உறுதி
கிளிநொச்சி - அக்கராயன்குளம் கமநல சேவை நிலையத்திலிருந்த இரசாயனப் பசளை தொடர்பில் கமநல சேவை குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்துக்கு அமைவாக உரிய விசாரணை முன்னெடுக்கப்படும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, அக்கராயன் குளம் கமநல சேவை நிலையத்திலிருந்த 30 அந்தர் யூரியா களவாடப்பட்டமை தொடர்பாக கிளிநொச்சி, அக்கராயன் குளம் காலநிலை சேவைகள் குழுவினரால் கடிதம் ஒன்று இன்றைய தினம் மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த கடிதத்தை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அவர் கருத்து தெரிவிக்கையில் குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
முதலாம் இணைப்பு
கிளிநொச்சி - அக்கராயன் குளம் கமநல சேவை நிலையத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட இரசாயன உரம் மீளக்கொண்டு வந்து மேட்டு நிலப்பயிர் செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி இன்றைய தினம் கமநல சேவை நிலையத்தின் செயற்பாடுகளை முடக்கிய நிலையில் பொலிஸாரின் பேச்சு வார்த்தையையடுத்து நிர்வாக முடக்கல் செயற்பாடு விவசாயிகளால் கைவிடப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உரம் வழங்க தீர்மானம்
அக்கராயன் குளம் சேவை நிலையத்தில் இருந்த இரசாயன உரங்களை மேட்டுநில செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு வழங்குவதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் மேற்படி கமநல சேவை நிலையத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக இருந்த 1500 கிலோ யூரியா இரவோடு இரவாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரால் கொண்டு செல்லப்பட்டதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 07ம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து கடந்த 08ம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட விவசாய பொதுக்கூட்டத்திலும் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இதற்கான தீர்வு எதுவும் தமக்கு கிடைக்கவில்லையெத் தெரிவித்து இன்றைய தினம் விவசாயிகள் ஒன்றிணைந்து அலுவலகத்தின் செயற்பாடுகளை முடக்கும் வகையில், விவசாயிகள் கமநல சேவை நிலையம் முன்பாக கூடியிருந்தனர்.
இதனையடுத்து குறித்த இடத்துக்கு கிளிநொச்சி
அக்கராயன் பொலிஸார் விரைந்து உடனடியாக நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வந்தனர். இதனையடுத்து வரும் வாரத்துக்குள்
இதற்கான தீர்வு இல்லையேல் குறித்த கமநல சேவை நிலையத்தை முற்றுமுழுதாக முடக்க போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர் .



