சர்வகட்சி ஆட்சி முறை வேண்டாம்: ஜே.வி.பி கட்சி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் (Photo)
புதிய இணைப்பு
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலையும் ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாதென யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று(12) இடம்பெற்ற போராட்டத்திற்கு பின்னர் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஊடக அறிக்கையில், "வடக்கு கிழக்கிலே ஊடக அடக்குமுறை என்பது கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. வடகிழக்கிலே 39 ஊடகவியலாளர்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதேபோல ஊடக நிறுவனங்களும் தாக்கப்பட்டிருக்கின்றன.
கணிசமான ஊடகவியலாளர்கள் அச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்றார்கள். இந்த நேரம் வரை ஊடகத் துறை என்பது ஒரு நெருக்கடியான துறையாகவே காணப்படுகின்றது.
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்
இந்த நிலையில் தான் கொழும்பில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவம் மீண்டும் பதிவாகியுள்ளது. வடகிழக்கு ஊடகவியலாளர்களுக்கு பரீட்சயமாக இந்த தாக்குதல்கள் காணப்பட்டாலும் கொழும்பில் அது மீண்டும் எதிரொலிக்கிறது.
இந்த நிலையில் வடகிழக்கில் ஊடகவியலாளர்கள் மீதான காணாமலாக்கல், படுகொலைகள், அச்சுறுத்தல்கள் போன்ற செயற்பாடுகளை நாங்கள் எவ்வாறு கண்டித்தோமோ தற்பொழுது கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலையும் ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாது.
அந்தவகையில் எமது கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற அனைத்து மட்ட பிரச்சனைகளிலும் எமது யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் நீண்டகாலமாக செயற்பட்டு வருகிறது.
அந்த வகையில் இச்செயற்பாடுகளின் போது ஊடகங்களினுடைய பங்களிப்பும் எமது கலைப்பீட மாணவர் ஒன்றியத்தோடு பின்னிப்பிணைந்ததாகவே காணப்படுகிறது.
ஆகவே இனிவரும் காலங்களில் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதோ அச்சுறுத்தப்படுவதோ தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதனை அரச நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதனை யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியமாக வலியுறுத்தி நிற்கின்றோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி-தீபன்
முதலாம் இணைப்பு
சர்வகட்சி ஆட்சி முறை வேண்டாம், மக்கள் விரும்பும் ஆட்சி முறையே வேண்டும் என கோரி ஜே.வி.பி கட்சி ஆதரவாளர்கள் ஆர்பபாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜே.வி.பி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் என்.சுந்தரேசன் தலைமையில் இந்த போராட்டம் இன்று (12) , மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டம்
"ஊழலை தவிர நீங்கள் உருப்படியாக செய்தது என்ன? நாட்டை விற்று ஏப்பம் விட்ட கொள்ளையரை விரட்டியடிப்போம், உங்களுக்கு கொண்டாட்டம் மக்களுக்கு திண்டாட்டம், மக்களை ஏமாற்றும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு? மற்றும் சர்வகட்சி அரசாங்கம் வேண்டாம்” என பல பதாதைகளை ஏந்தியவாறு போராட்டகாரர்கள் கோசங்கள் எழுப்பியுள்ளனர்.
இதனையடுத்து, சுமார் அரை மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் அங்கிருந்து மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.
யாழ்ப்பாண போராட்டம்
ஊடக அடக்கு முறை மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து யாழ்.பல்கலைக்கழகம் முன்னிலையில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் (12) மதியம் 12 மணியளவில் போராத்தை முன்னெடுத்துள்ளனர்.
செய்தி-தீபன்