20ஆவது வாரமாக தொடரும் போராட்டம் - காணி உரிமையாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது, இன்று(04.09.2026) 20ஆவது வாரமாக இடம்பெற்று கொண்டிருக்கின்றது.
20ஆவது வாரமாக தொடரும் போராட்டம்
வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகின்றது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில், காணிகள் விடுவிக்கப்படாத நிலை காணப்படுகின்றது.
இதனால் தமது காணிகளுக்கான தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் போராட்டத்தை தொடர்ந்து வரும் உரிமையாளர்கள், இன்றும் கூடிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

