ஹிருணிகாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்(Video)
குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு சென்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவு தலைவி ஹிருணிகா பிரேமச்சந்திரவை பொலிஸார் செல்லவிடாது தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான தரிந்து உடுவரகெதரவை குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பாணையை கண்டித்து இன்று கொழும்பு கோட்டையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஹிருணிகா சென்றிருந்தார்.
குற்றவியல் விசாரணை திணைக்களம் அமைந்துள்ள இடத்தில் இருந்து பல மீற்றர் தூரத்தில் பொலிஸார் வீதித்தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனால், கோட்டை பகுதியில் சிறிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொலிஸார் தம்மை தடுத்துள்ளமை குறித்து அங்கு கருத்து வெளியிட்ட ஹிருணிகா,
பொலிஸார் ஆண்களாக அல்லது வேறு என்ன, இவர்களுக்கு வெட்கமில்லையா. உண்மையில் பொலிஸாருக்கு வெட்கமில்லை. பெண் இந்த இடத்திற்கு வந்து பேசுகிறேன்.
ஒரு கிலோ மீற்றருக்கு முன்னால் தடைகள் போடப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் மாளிகை வெகு தூரத்தில் இருக்கின்றது.
நாங்கள் ஜனாதிபதிக்கு எதிராக எந்த நடவடிக்கைக்கும் வரவில்லை. எந்த அளவுக்கு பொதுமக்களுக்கு பயப்படுகிறார்கள் என்று பாருங்கள். நாட்டு மக்களின் பலம் இப்போது தெரிகிறது தானே.
மக்கள் மீதான அச்சம் காரணமாக வீதியை மூடியுள்ளனர்
பொது மக்கள் மீதுள்ள அச்சம் காரணமாகவே இப்படி வீதியை மூடுகின்றனர். மக்கள் அனைவரும் வீதியில் இறங்கினால், இவர்களின் கதை முடிந்து விடும். இதனை முடிவுக்கு கொண்டு வர தயவு செய்து வீதியில் இறங்குங்கள்.
ஆயிரம் இரண்டாயிரம் பேர் இங்கு வந்தால், இந்த தடைகளை உடைத்துக்கொண்டு செல்ல முடியாதா?. ஏன் வீடுகளுக்கு இருக்கின்றீர்கள், வெளியில் வாருங்கள்.
இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டாமா. இங்கு இருக்கும் அனைவருக்கும் எரிபொருள், மருந்து, உணவு இல்லாத பிரச்சினை இருக்கின்றது. பொலிஸார் ஜனாதிபதியை பாதுகாக்கின்றனர்.
வீதி தடைகளை ஏற்படுத்த நீதிமன்ற உத்தரவு இருக்கின்றதா?. மூன்று பெண்கள் இங்கு வந்து உள்ளே செல்ல முயற்சித்தமைக்கே இப்படியான நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.
தரிந்து என்ற நான் அறிந்த சகோதரர் இன்று குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க வந்திருந்தார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கவே நான் இங்கு வந்தேன்.
நான் வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்து வந்த போது, அச்சப்பட்டு வீதியை மூடி விட்டனர். மக்கள் எவருக்கும் இனிமேல் வீதியில் செல்ல முடியாது போகும். மக்கள் கூடிய பேசிக்கொண்டிருந்தால், இவர்கள் வீதியை மூடுவார்கள்.
நீங்கள் வீதியை மூடிக்கொண்டிருங்கள், அடுத்த சில தினங்களில் பாருங்கள் இந்த இடத்திற்கு எத்தனை பேர் வரப்போகிறார்கள் என்று. அடுத்த போராட்டம் இந்த இடத்திலேயே ஆரம்பிக்கும்.
ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்ப அணிதிரளுங்கள்
இன்னும் இரண்டு வருடங்கள் பொறுத்திருந்தால், நாங்கள் வீதியில் இறந்து போவோம். ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்ப அணிதிரளுங்கள். இல்லாவிட்டால், அது நடக்காது.
மேலும் அழிவுகளை ஏற்படுத்தி, இரண்டு ஆண்டுகளில் முழுமையாக அழித்து விட்டே செல்வார். தற்போதே மக்கள் எழுச்சி பெறவில்லை என்றால், நாங்கள் மேற்கொள்ளும் போராட்டங்களில் பயனில்லை.
மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். ஆசையானதை செய்ய முடியவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கு செல்ல முடியவில்லை. அவசரமாக வைத்தியசாலைக்கு செல்ல முடியவில்லை.
தொழிலுக்கு செல்ல முடியவில்லை. பிள்ளைகளுக்கு பாடசாலைக்கு செல்ல வழியில்லை. என்ன இந்த வாழ்க்கை. பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமாயின் நாட்டு மக்கள் வெளியில் இறங்க வேண்டும் எனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர கூறியுள்ளார்.