ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு
ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடாத்தியதாகவும் வீதியை மறித்ததாகவும் ஏறாவூர் பொலிஸாரினால் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு கட்டளைக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இரு ஊடகவியலாளர்கள் உட்பட 30 பேருக்கு எதிராக தொடரப்பட்ட குறித்த வழக்கானது, எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகை தந்திருந்தார்.
வழக்கு தாக்கல்
இதன்போது, தமது கோரிக்கையினை வலியுறுத்தி கால்நடை பண்ணையாளர்கள்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், சிவில் சமூகப்பிரதிகள் ஆகியோர் அமைதியான முறையில் போராட்டம் ஒன்றினை நடாத்தினார்கள்.
இதனை தொடர்ந்து, பொலிஸார் வீதி தடைகளை ஏற்படுத்தி பெருமளவு பொலிஸார் மற்றும் கலகமடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் காரணமாக குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.
எனினும், தொடர்ந்து போராட்டம் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என தெரிவித்து 30 பேருக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி முன்னிலையில் விசாரணை
இதன் போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பொலிஸ் நிலையங்கள் ஊடாக பல இடங்களை சேர்ந்தவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதில் போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள், குறித்த போராட்டத்தின் போது செய்தி சேகரிக்க சென்ற இரண்டு ஊடகவியலாளா்கள் என 30 பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்தே குறித்த வழக்கு இன்றைய தினம் ஏறாவூர்ப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு கொண்டு வரப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







