அரசிற்கு எதிராக மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (Photos)
மட்டக்களப்பு பல்கலைகழக மாணவர்களால் 'நாட்டை தெருவுக்கு கொண்டுவந்த அனைத்து திருடர்களை விரட்டியடிப்போம்' எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கபட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டமானது இன்று (06) காலை10.00 மணியளவில் மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கபட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலாச்சார பீட மாணவர் ஒன்றியத்தின் அழைப்பையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றினைந்தனர்.
“இதனையடுத்து மின்சாரத்தை தடையின்றி வழங்கு”, “அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவை குறை,” “மக்களை இருள் வாழ்க்கைக்கு தள்ளாதே”, “மக்களை பட்டினி சாவுக்கு தள்ளாதே”, “பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வு வழங்கு”, “கோட்டா வீட்டுக்கு செல்” போன்ற பல்வேறு வாசகங்கள் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஆர்ப்பாட்ட பேரணியாக செங்கலடி சந்திக்கு சென்று அங்கு சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து மீண்டும் பேரணியாக பல்கலைக்கழக வளாகத்தை சென்றடைந்த பின்னர் கலைந்து சென்றுள்ளனர்.
இதேவேளை குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவும், நேற்று திங்கட்கிழமை காலையிலும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



