தலவாக்கலை பிரதேச செயலகத்துக்கு விரிவான இடவசதி கோரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு இடவசதி கொண்ட கட்டிடம் ஒன்றை வழங்குமாறு கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தை பிரதேச செயலக அலுவலக ஊழியர்கள் இன்று (29.12.2025) முன்னெடுத்திருந்தனர்.
பிரதேச செயலக கட்டடத்தில் இடவசதி குறைவாக இருப்பதால், சேவைகளைப் பெற வருபவர்களும், அங்கு பணிபுரிபவர்களும் நாளாந்தம் கடுமையான அசௌகரியங்களையும், பல்வேறு சிரமங்களையும் எதிர்கொள்வதாக ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஊழியர்கள் தெரிவிக்கும் விடயம்
முதியவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏராளமான மக்கள் தினமும் குறுகிய மேல் தளக் கட்டடத்திற்கு வரும்போது, ஊழியர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும், அதன் காரணமாக தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்ய சிரமப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் பொதுமக்களுக்கு அலுவலகத்தில் இருக்கை மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லாததால் பொது மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர்.

கோரிக்கை
தலவாக்கலை பிரதேசத்தில் உள்ள 34 கிராம சேவைப் பிரிவுகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் இங்கு சேவைகளைப் பெற வருவதாகவும், சேவை நேரம் வரும் வரை காத்திருக்க கூட இடம் இல்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே தங்கள் கடமைகளை சரிவரச் செய்வதற்கும், சேவைகளைப் பெற வரும் பொதுமக்களுக்கு சௌகரியமான வசதிகளை வழங்குவதற்கும் ஏற்ற வகையில் விசாலமான இடவசதிகள் கொண்ட கட்டடமொன்றை பிரதேச செயலகத்திற்கு வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |