திருகோணமலையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள புல்மோட்டை கனிய மணல் கூட்டுத் தாபன ஊழியர்கள்
திருகோணமலை - புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் தங்களுக்கு 18 மாதங்கள் இடைவிடாது மாதாந்த சம்பளம் வழங்கப்படவில்லை என்பதற்காக, இன்று 8வது நாளாக கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிர்வாகத்துடனும், அமைச்சருடனும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் இதுவரை பலனளிக்காத நிலையில் போராட்டத்தை மேற்கொள்வதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டம் தங்களுக்கு உரிய நியாயமான தீர்வு கிடைக்கும் வரை தொடரும் எனவும் அவர்கள் கூறினர்.
முதலாம் இணைப்பு
திருகோணமலை - புல்மோட்டை கனிய மணல் கூட்டுத் தாபனத்தில் பணியாற்றி வரும் 83 ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக நேற்றைய தினம் (20) ஏழாவது நாளாகவும் சத்தியாக்கிரக போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிப்பு
இதன்போது போராட்டக்காரர்கள் கூறுகையில், சுமார் 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமையால் பொருளாதார ரீதியாக தங்களது குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலை பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் உரிய துறை சார் அமைச்சர் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
தங்களுக்கு சாதகமான தீர்வை பெற்றுத் தரக் கோரி சத்தியாக் கிரக போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







